விஜய்யின் வெற்றி கானல் நீர்.. அது செல்லாத ஓட்டு – ராஜேந்திர பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய்யின் வெற்றி என்பது கானல் நீர் போன்றது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தவர்களுக்கு யார் வேட்பாளர் என்றே தெரியாது. ஆகையால், இந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் போன்றவைதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “திமுக, அதிமுக இரண்டுமே வேண்டாம் என்று நினைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த மாற்றுக்கட்சி வருகிறதோ அதற்கு வாக்களிக்கிறார்கள். வைகோ, கேப்டன் விஜயகாந்த், சீமான் ஆகியோர் வந்தபோது அந்த வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். இந்த வாக்காளர்கள் எப்போதுமே இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போட மாட்டார்கள். அந்த நிலையில் தான் தற்போது விஜய் வந்த நிலையில் அந்த ஓட்டு அங்கு சென்றுள்ளது. அதோடு விஜய் நடிகராக இருந்ததால் எளிதாக மக்களிடம் சென்றடைந்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போதைய முதல்வராக இருந்த ஸ்டாலினும் ரூ.2,000 தருவதாகச் சொன்னார், எடப்பாடியும் ரூ.2,000 தருவதாகக் கூறினார். ஆனால் முதலமைச்சராகவே இல்லாத இவர் ரூ.2,500 தருவதாகச் சொன்னார். வீடு இல்லாதவர்களுக்கெல்லாம் வீடு, கல்லூரி படிப்பு வரை இலவசம் என எதையெல்லாமோ சொன்னார்.

செய்யவே முடியாத, நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களை, தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசித்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அதனால், இந்த வெற்றி நிச்சயம் நிரந்தரமானது கிடையாது. இது கானல் நீர். இதை நம்பி சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் இணையும் காலம் வரும். நிச்சயமாக இது நிற்காது, நிலைக்காது.

ADVERTISEMENT

இன்று அமைந்திருக்கும் தவெக ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சிதான், அது பல கூட்டு கட்சிகளின் கலவை. திமுக ஒரு முறைதான் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அது மெஜாரிட்டி கொண்ட ஆட்சியாகத்தான் இருந்தது. இன்று தவெக, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கும் ஒரு ஆட்சி. ஆகவே எந்த நேரத்தில் எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.

அதற்குள் “நாம் இப்படி ஆயிடுவோம், அப்படி ஆயிடுவோம், அதிமுக தூர்ந்து போன கட்சி” என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு விஜய் பேசுகிறார். இது போன்ற அரசியல் விமர்சனங்களை எல்லாம் அதிமுக தாங்கிப் பழகிய இயக்கம் தான்.

ADVERTISEMENT

ஆனால் தவெகவிற்கு ஓட்டு போட்டவர்கள் எதைப் பார்த்தார்கள்? எதையும் பார்க்கவில்லை. யார் வேட்பாளர் என்று தெரியாது, ஒண்ணுமே தெரியாமல் ஓட்டு போட்டிருக்கிறார்கள். ஆக, அந்த ஓட்டு செல்லாத ஓட்டு தான் என்று என்னைப் போன்றவர்கள், நம்மைப் போன்றவர்கள் நினைக்க வேண்டும்; இன்றைக்கு மக்களே அதை யோசிக்க ஆரம்பித்துள்ளனர்,” என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share