“ஓரணியில் திமுக – தவெக” என்ற திருமாவளவனின் கருத்து – மாணிக்கம் தாகூர் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

பா.ஜ.க.வை எதிர்க்கப் போகும் அணியில் திமுகவும், தவெகவும் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலைநோக்கு பார்வை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜூலை 11) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கிறோம். நீட் தேர்வினால் ஐந்து மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடுமை தொடர்ந்து கொண்டே உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அர்த்தமில்லாத விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறார். நீட் காரணமாக தமிழகத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. நீட் பயிற்சி மையங்களில் 5,000 கோடி ரூபாய் வணிகம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவதால் தமிழக மாணவர்களுக்கு உரிய இடம் கிடைக்காமல் போகிறது. இந்தியா முழுவதும் நேர்மையான தேர்வு முறை வேண்டும் என ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT

அப்போது பா.ஜ.க.வை எதிர்க்கப் போகும் அணியில் திமுகவும் தவெகவும் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் பார்வை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அண்ணன் திருமாவளவனின் பார்வை என்பது தொலைநோக்குப் பார்வை. அவர் சொல்லும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்து கணக்கிட்டுப் பார்க்கக் கூடாது. திருமாவளவன் சொல்வது கேரளா மாடல் போன்றது. நாங்கள் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம். கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸும் நேர் எதிராக நிற்கிறோம்; ஆனால் பா.ஜ.க. எதிர்ப்பில் ஒற்றுமையாக உள்ளோம். அந்த நிலையைத்தான் அண்ணன் திருமாவளவன் சொல்லுகிறார். அதுபோல் தமிழகத்திலும் ஒரு நிலை உருவாக வேண்டும், அதற்கு இரண்டு கட்சிகளும் தயாராக வேண்டும் என்கிறார்.

கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளும் நாங்களும் சண்டை போட்டுக் கொள்வோம்; ஆனால் டெல்லியில் ஒரே மேஜையில் உட்கார்ந்து பா.ஜ.க.வைக் கொள்கை அளவில் எதிர்ப்பதில் தெளிவாக உள்ளோம். அந்த நிலைக் குறித்து அண்ணன் திருமா பேசுகிறார். தமிழகத்தைப் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதிகாரம் இல்லாத மாநிலமாகக் கொண்டு வர திருமாவளவன் நினைக்கிறார்” என்றார்.

ADVERTISEMENT

கரூரில் முதலமைச்சரின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “கரூரில் முதலமைச்சர் தனக்கு மிகுந்த வலியான சம்பவம் என்று கூறியுள்ளார். ஒரு அரசியல் தலைவராக அவரது பார்வையில், அவரது பாணியில் பேசியுள்ளார்” என்றார்.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, “கர்நாடக மாநில அரசியல்வாதிகள் ஒன்றாக இருக்கிறார்கள். அதுபோல் தமிழகத்திலும் எல்லா அரசியல்வாதிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டோமோ அந்த நிலையில் இருந்து மாறக் கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share