திமுக கூட்டணியில் ஜெயித்த கட்சிகளைத் தன் பக்கம் இழுத்து அமைச்சர் பொறுப்பு கொடுப்பது நியாயம் என்றால், அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியும் நியாயம்தான்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (ஜூலை 11) டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் எனத் திருமாவளவன் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இல்லை, அவர் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதை ஒரு அரசியல் பேச்சாகத்தான் (Political Statement) நான் பார்க்கிறேன்.
அதேபோல்தான் திமுகவும் அதிமுகவும் ஒன்றாக வருமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஒரு அரசியல் சூழல் (Political Situation) யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும். அதைத்தானே கடந்த காலத்திலும் பார்த்திருக்கிறோம். பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் கூட ஒன்றாக இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் அல்லவா? எனவே, இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
அதனால் இதெல்லாம் நடக்குமா, நடக்காதா என்று இப்போது சொல்ல முடியாது. இப்போது திமுக கூட்டணியில் ஜெயித்த கட்சிகளைத் தன் பக்கம் இழுத்து, அல்லது அவர்கள் தவெக கூட்டணிக்குப் போய் ஆதரவு கொடுத்து அமைச்சர் பொறுப்பில் அமர்வது நியாயம் என்றால், அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியும் நியாயம்தான்” என்று தெரிவித்தார்.
