இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் குடும்பங்களுக்கும் அரசு வேலை? – அன்புமணி கோரிக்கைக்கு திமுக முன்னாள் எம்எல்ஏ பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

பாமக தலைவர் அன்புமணி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் சிலைக்கு மரியாதை செலுத்துவாரா என தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு த.வெ.க தரப்பில் ஏற்கனவே தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற பின் நேற்று முதன்முறையாக கரூர் வந்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பை ஏற்க மறுத்தவர்களின் காரணங்களையும் அவர் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 1987-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்தனர். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது போல வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அன்புமணியின் இந்த கோரிக்கைக்கு விமர்சிக்கும் வகையில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அன்னியூர் சிவா பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 1987 இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 பேரின் சிலைகளுடன் கூடிய நினைவு மணிமண்டபம் கடந்த திமுக ஆட்சியில் 6 கோடி செலவில் கட்டப்பட்டு 2025-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினரையும் அரசு சார்பில் அழைத்து கௌரவித்தார்.

ADVERTISEMENT

எனவே, தமிழக அரசு அமைத்துள்ள இடஒதுக்கீட்டு போராட்ட மணிமண்டபத்திற்கு பாமக தலைவர் அன்புமணி முதலில் நேரில் வந்து, தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அதன் பிறகு அரசு வேலை பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share