கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட வாரிசுகளுக்கும் அரசு வேலை கொடுங்க – விஜய்க்கு வானதி கோரிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay vs Vanathi

கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

கருணை அடிப்படையில் இப்பணி வழங்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்கள் கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவுத் துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.

ADVERTISEMENT

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share