காமராஜரும், அண்ணாவும், ராஜாஜியும் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதலமைச்சராக இருக்கிறார் என முதல்வர் விஜய்யை ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறுகையில்:
“சிங்கப்பூருக்கு எ.வ.வேலு ஓடுகிறார், ஓடுகிறார் என்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னர் எ.வ.வேலுவுக்கு உடல்நிலை சரியில்லை, சில பிரச்சினைகள் இருந்தன. இதற்காக அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற கடந்த 17-ஆம் தேதியே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். முதலில் அவர் 25-ஆம் தேதி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
சோதனை மற்றும் பயண மாற்றம்
அவர் கிளம்ப இருந்த சூழலில், கடந்த 25-ஆம் தேதி காலை 6 மணி அளவில் அவரது இல்லத்தில் அதிரடிச் சோதனை நடைபெற்றது. அன்று 11 மணிக்கு அவர் செல்ல வேண்டியிருந்த நிலையில், சோதனை காரணமாக அவரது பயணம் தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்குப் பின்னரே அவர் சென்றார்.
சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்னரே, இரண்டு நாட்கள் தாமதமாக அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
உளவுத்துறையின் செயல்பாடு குறித்த கேள்வி
ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தன் வசம் இருக்கும் உளவுத்துறை மூலம் எந்தத் தலைவர் எப்போது, எங்கு, எதற்காகச் செல்கிறார் என்ற அனைத்து விவரங்களும் தெரியாதா? உண்மை நிலை இவ்வாறு இருக்க, முதலமைச்சர் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய் பொய்யாகப் பேசுவதா? பொய்க்கு அளவே இல்லையா? ஒரு முதலமைச்சர் பொய் சொல்லலாமா?
வெட்கமாக இருக்கிறது. காமராஜரும், அண்ணாவும், ராஜாஜியும் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதலமைச்சராக இருக்கிறார்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
