தேசிய கீதமான ஜன கண மன (Jana Gana Mana) பாடலை மத்திய அரசு கைவிட முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்தைப் பதிலீடு செய்துவிடுமா?
திரு பரகால பிரபாகர் கூறியிருப்பதை இங்கே தருகிறேன்:
“ சமீபத்தில் ஒன்றிய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் ஒன்றிய அரசின் அனைத்து அதிகாரப்பூர்வக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடல் முழுமையாகக் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும். மேலும், தேசிய கீதமான ஜன கண மன பாடப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கை நிர்ணயித்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் ஜன கண மன பாடலைத் தவிர்ப்பதற்கான காரணங்கள் கூறப்படத் தொடங்கும். நேரம் போதவில்லை, ஏற்கனவே வந்தே மாதரம் பாடிவிட்டோம், ஆகவே ஜன கண மன பாடலைத் தவிர்த்துவிடலாம் என்று அவர்கள் கூறுவார்கள். அந்தக் காரணம் வெளிப்படையாகப் பார்க்கும்போது பாதிப்பற்றதாகத் தோன்றலாம். ஆனால், ஜன கண மன முற்றிலுமாக மறைந்து போகும் வரை அந்தக் காரணம் ஒரு இடைக்காலச் சாக்குப்போக்காக மட்டுமே இருக்கும். அதன் பின்னர், ஜன கண மன பாடலை முற்றிலுமாக நீக்குவதற்கான ஒரு அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படலாம்.”

வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கி சட்ட மசோதா ஒன்று கொண்டுவரப்படலாம் என இன்று செய்தி வெளியாகியுள்ளது.
பாஜக அரசை சிறுபான்மை அரசு என நினைத்தோம், அது பெரும்பான்மைவாத அரசாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு
சிபிஎம் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய நாட்டைப் பத்துக் கரங்களைக் கொண்ட துர்கையாக, தாமரை மலரில் உறையும் லட்சுமியாக, அறிவைத் தரும் சரஸ்வதியாக உருவகித்து எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை அனைத்து அரசு நிகழ்வுகளிலும் வரி நீங்காமல் அனைவரும் 3 நிமிடம் 10 வினாடிகள் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது இந்து ராஷ்டிர அரசியலின் அதிகாரப்பூர்வ முன்னெடுப்பு.
பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒடிசா, வங்காளம் ஆகிய தேசிய இனங்கள், விந்திய, இமய மலைகள், யமுனை, கங்கை நதிகளென இந்தியாவின் பன்முக அடையாளத்தைப் புகழுக்குரிய வாக்கியமாக்கிய தேசிய கீதம் இரண்டாவதாக்கப்பட்டுள்ளது.
மாநில வணக்கம், மொழி வணக்கப் பாடல்கள் மூன்றாவதாக உள்ளன.
ஒற்றை இந்து மத அடையாளமே முதன்மையானது, இந்தியாவின் பன்முக அடையாளமும், மொழி அடையாளங்களும் அதன் பின்பே. பிற மத அடையாளங்களுக்கு எந்த இடமும் இல்லை என அறுதியிட்டுச் சொல்கிறது இந்த அறிவிப்பு.
இந்திய அரசியல் சாசனம் சொல்லும் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், இந்திய பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

‘ஜன கண மன’ (‘Jana Gana Mana’) – மத்திய அரசின் புதிய அறிவிக்கை
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் (வந்தே மாதரம்) ஆகியவற்றை அரசு நிகழ்ச்சிகளில் இசைப்பது மற்றும் பாடுவது தொடர்பான விதிகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
அந்த அறிக்கையில்,
- அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகிய மூன்றையும் இசைக்க வேண்டிய சூழலில், முதலில் மாநிலப் பாடல், அதனைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக தேசிய கீதம் (ஜன கண மன) என்ற வரிசையைப் பின்பற்ற வேண்டும்.
- தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைக்கும்போது, அவற்றின் சரியான உரை (Script), உச்சரிப்பு (Pronunciation) மற்றும் ஒலிப்புமுறை (Diction) ஆகியவற்றைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்
என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு விழாக்கள், குடியரசுத் தலைவரின் வருகை, ஆளுநர்களின் உரைகள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளில் இந்த நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கை புதிய மாற்றத்தைக் கொண்டுவரவில்லை; மாறாக, ஏற்கனவே இருந்த விதிகளை ஒருங்கிணைத்து, அரசு நிகழ்ச்சிகளில் தேசிய அடையாளங்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
