ஓடுறது, ஒளியறது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு கிடையாது என்று முதல்வர் விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
இதயம் தொடர்பான சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு சென்ற முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 12) சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஓடுறது, ஒளியறது, பதுங்குவது எல்லாம் திராவிட இயக்கத்துக்கோ திமுகவுக்கோ இல்லை. கலைஞரும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்கவில்லை.
பொதுவாக, நான் மார்பு சம்பந்தப்பட்ட—ஹார்ட் (Heart)—சம்பந்தப்பட்ட மருத்துவத்தை சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஹாஸ்பிட்டல், டாக்டர் ஜெயராம் லிங்கமநாயக்கர் பெற்று வருகிறேன். இந்த துறையின் தலைவர் அவர்தான். தமிழ்நாட்டுகாரர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக அங்கே இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல்வாதி அத்தனை பேருக்கும் அவரைத் தெரியும். அவர் பேருதவி செய்வார். யார் போனாலும் உதவி செய்யக்கூடியவர். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், 2016 ஆகஸ்ட் 13அன்று நான் மருத்துவத்திற்கு முதன்முதலாக அங்கு சென்றேன். அங்கு இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம் நான் பார்த்ததுடைய வரலாறு எல்லாம் இருக்கிறது. இதனுடைய சம்மரி எல்லாம் இருக்கிறது.
தொடர்ந்து மவுண்ட் எலிசபெத் ஹாஸ்பிட்டல், லைஃப் ஹெல்த் சென்டரில் (Life Health Centre), 29-9-2023ல் என்னுடைய உடல் பரிசோதனை எல்லாம் முடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இது இரண்டாவது முறை.
பின்னர், ஐந்து ஆண்டு காலம் இந்த ஆட்சியில பெரும் பணிகளை இரவென்று பகலென்று பாராமல் பணிகளை நாங்களெல்லாம் மேற்கொண்டோம். தேர்தல் வந்தது. தேர்தலுக்குப் பின்னால் மீண்டும் முறையாக மருத்துவம் போய் பார்த்துக்கொள்ள வேண்டும், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில, நான் ஜூன் 15ஆம் தேதி, சிங்கப்பூருக்காக போக வேண்டும் என்று விசா அப்ளை செய்தேன்.
போன மாதம் 17ஆம் தேதி எனக்கு விசா கொடுத்திருக்காங்க. அந்த விசா கொடுத்த அன்னைக்கே, அடுத்தது இண்டிகோவில், 25ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்கு டிக்கெட் போட்டிருக்கிறேன். அதன்படி 25ஆம் தேதி மதியம் 2:20 பிளைட்டுக்கு போறதுக்காக டிக்கெட் போட்டேன். அதனுடைய டிக்கெட்தான் இது.

ஆனால், 25ஆம் தேதி நான் கிளம்ப வேண்டும் என்று முடிவு பண்ணிய போது, காலையில 7 மணிக்கு என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் சோதனை என்ற பெயரிலே என்னிடத்திலே வந்து வாரண்ட் காட்டுனாங்க.

என்ன வாரண்ட் என்று கேட்டேன். “சார், உங்க வீட்டை நாங்க சோதனை பண்ணனும், ஒத்துழையுங்க” என்று சொன்னாங்க. “தாராளமாக ஒத்துழைக்கிறேன், இந்த காவல்துறை ஏற்கனவே சென்ற மாதத்துக்கு முன்னால் இதே தமிழ்நாடு அரசு எங்களது நிர்வாகத்திலே பணியாற்றிய காவல்துறைதானே, காவல்துறையினர் பொதுவானவர்கள் தானே, நான் முழு ஒத்துழைப்பு தர்றேன்” அப்படின்னு சொன்னேன்.

அன்னைக்கு வந்த அடிஷனல் சூப்பரண்ட் புகழ்வேந்தன் , நான் அவர்கிட்டயே சொல்லிக் காட்டுனேன். “இதுமாதிரி நான் இன்றைக்கு 2:20-க்கு நான் வந்து விமானத்தில சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்குப் போறதாக நான் டிக்கெட் எடுத்திருக்கிறேன், இப்ப நீங்க சோதனைக்கு வந்திருக்கீங்க. இன்னைக்கு சோதனை முடிஞ்சவுடனே, நான் நாளைக்காவது டிக்கெட் மாத்தணும்” அப்படின்னு சொல்லி முடிச்சவுடனே, அன்றைக்கு இரவு அவங்க முடிச்சிட்டுப் போனவுடனே இதே பத்திரிக்கை நண்பர்களைப் பார்த்து, இந்தச் சோதனை தொடர்பாக நான் பேசினேன். 25ஆம் தேதி போட்ட டிக்கெட்டை மறுபடியும் மாற்றி 26ஆம் தேதி, இண்டிகோவில் மறுநாள் காலையில நான் டிக்கெட் போட்டிருக்கிறேன்.
அதற்குப் பின்னர் இதே விமான நிலையத்தில்தான், நான் 26ஆம் தேதி இங்கிருந்து சிங்கப்பூர் மருத்துவத்திற்குப் போனேன். மருத்துவத்திற்குப் போனபொழுது, அங்க என்னுடைய மருத்துவப் பரிசோதனை எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. எனக்குப் பல பிரச்சினைகள் இருக்கிறது. அலர்ஜி, , நியூரோ,, ஹார்ட் பிராப்ளம் எல்லாம் இருந்தது. மூன்று பிராப்ளத்துக்குத்தான் அங்க போகணும்னு முடிவு எடுத்து நான் போனேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அலர்ஜி பிராப்ளம் என்றால் உண்ணுகிற உணவு பொருள்களில் எது எதெல்லாம் உடம்பில் சேரும், ஏன் அதனால் அலர்ஜி வருகிறது என்பதை சோதிக்க ஒரு முறை ஊசி போட வேண்டும். அப்படி போட்டால் 3நாள் அப்சர்வில் இருக்க வேண்டும் என்கிறார்கள். நான் அது மாதிரி மூணு முறை நான் ஊசி போட்டிருக்கிறேன். அதே ஒன்பது நாள் எடுத்துச்சு.
அடுத்து, 29ஆம் தேதி நியூரோ பிராப்ளத்திற்காக லீகிம் பென் என்ற மருத்துவரிடம் ஆலோசனை செய்து அன்றைய தினம் டெஸ்ட் எல்லாம் எடுத்து அவருடைய மருத்துவ ஆலோசனையை நான் பெற்றிருக்கிறேன்.
அடுத்து 30 அன்று வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு, பீட்டர் எங்ஸ்டன் என்ற மருத்துவரை நான் பார்த்திருக்கிறேன். அன்றைய தினமே இந்த அலர்ஜி டாக்டர் செங் எங் குவாங்-ஐயும் பார்த்திருக்கிறேன்.அவருடைய மருத்துவம் தொடர்ந்து 9ஆம் தேதி வரை இருந்தது. அதே நேரத்தில் 3ம் தேதி இதய மருத்துவருடைய பார்வையில் தான் இருந்தேன். அவர்தான் சீப் டாக்டர், அவருடைய ரெபரன்ஸ்லதான் ஒவ்வொரு டாக்டரையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா டாக்டருடைய சம்மரி என் கையில இருக்குது. ஒவ்வொரு டாக்டரும் என்ன ஆலோசனை கொடுத்திருக்காங்க, என்ன மருந்து கொடுத்திருக்காங்க எல்லாம் முழுமையாக என்னிடத்தில் இருக்கிறது.
மருத்துவர்கள் கொடுத்த அனைத்து சம்மரிகளும் இந்த கேஸில் தான் இருக்கிறது. 2026-உடைய சம்மரி கம்ப்ளீட்டா நான் எந்தெந்த டாக்டரைப் பார்த்தேன், ஈசிஜியில இருந்து வயிறு, ஹார்ட் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், எல்லா டாக்டருடைய கன்சல்டிங் சம்மரி, என்ன உணவு சாப்பிடணும், என்ன செய்யணும், என்ன மாத்திரை என்ற அனைத்து டாக்குமெண்டுகளும் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில, 3ஆம் தேதி வரச் சொல்லி ஒரு சம்மன் எங்க வீட்ல ஒட்டுனதா எனக்குத் தகவல் சொன்னாங்க. நான் உடனே அந்தச் சம்மனை வந்து பேக்ஸ்ல அனுப்ப சொன்னேன். அதைப் படிச்சுப் பார்த்தேன். உடனே அந்தச் சம்மனுக்கு மரியாதை கொடுத்து அங்கேயே ஒரு கடிதம் எழுதினேன்.
அதில், நான் வருவதற்கு 10 தினங்கள் ஆகும். மருத்துவம் முடித்துவிட்டு வருகிறேன் என்று 3ஆம் தேதி கடிதம் கொடுத்தேன். 3 ஆம் தேதி கடிதத்திலேயே நான் வருவதற்கு 10 தினங்கள் ஆகும் என்று கூறியிருந்த நிலையில் மீண்டும் 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்து நான் அனுப்பிய கடிதத்தில், ”என் மீது தொடுக்கப்பட்ட எஃப்ஐஆர் வழக்கு சம்பந்தமாக 9-7-2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். 3-7-2026 அன்று எனது வழக்கறிஞர் மூலமாக நான் சிங்கப்பூரில் என் உடல் சம்பந்தமாக மருத்துவச் சோதனையில் ஈடுபட்டுள்ளேன், எனக்கு 10 தினங்கள் அவகாசம் தாருங்கள் எனக் கடிதம் கொடுத்திருந்தேன்.
தாங்கள் வழக்கறிஞரிடம் வாய்மொழியாக ’15ஆம் தேதிக்கு மேலும் நோட்டீஸ் அனுப்புகிறேன்’ என்று கூறிவிட்டு 5 தினங்களிலே வரச் சொல்லுகிறீர்கள். 9-7-2026 மீண்டும் என் இல்லத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் 12-7-2026-க்குள் மருத்துவச் சோதனை முடிந்துவிடும், எனவே தாங்கள் 12-7-2026-க்கு மேல் எந்தத் தேதியில் அழைத்தாலும், எந்தத் தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று வழக்கறிஞர் மூலமாக தெரிவித்திருந்தேன்.
இந்தசூழலில், எங்க ஓடுறாங்க, எங்க ஒளியறாங்க, எங்க பதுங்குறாங்க? மருத்துவத்திற்கு எப்போதும் போற மாதிரி போறோம், கடிதம் வக்கீல் மூலமா அங்கிருந்து நாங்க கொடுக்கிறோம், முழு ஒத்துழைப்பு தர்றேன்னு சொல்றோம். இவ்வளவுக்குப் பின்னாலும் ‘ஓடுறாங்க, ஒளியறாங்க, பதுங்குறாங்க’ன்றது அர்த்தமில்லாத கருத்துடைய வார்த்தைகள் தான்.
என்னைப்பொறுத்த அளவுக்கு நான் 2016 முதல் 2026 வரை தொடர்ந்து நான் மருத்துவத்திற்காக போயிருக்கிறேனே ஒழிய சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நான் போகவில்லை. இவ்வளவுதான் இன்னைக்கு நாட்டுக்குச் சொல்ல வேண்டிய விஷயம்.
ஒரு வார காலம் அவர்களுக்கு என்னென்ன கற்பனையில் தோன்றியதோ அப்படி கற்பனையில் பல்வேறு வகையயில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நீங்கள் டார்கெட் செய்யப்படுறீங்கன்னு நினைக்கிறீங்களா? ஏற்கனவே உங்க வீட்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து சோதனை பண்றாங்க. முதலமைச்சரும் கரூர்ல பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசுறாரு, இன்னொன்னு உங்களைக் குறிப்பிட்டுப் பேசுறாரு, தொடர்ச்சியா உங்களை டார்கெட் பண்றாரு…
” என்னைப்பொறுத்த அளவுக்கு டார்ச்சர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. நான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொறடாவாக தலைவர் என்னை நியமித்திருக்கிறார்கள். அதை இந்த அரசாங்கம், குறிப்பாக பேரவைத் தலைவர் அங்கீகரித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் பேரவைத் தலைவரிடத்தில பார்ப்பதோ அல்லது அரசு சம்பந்தப்பட்ட எதையாவது கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னால் அந்த கொறடாவுக்கு முழு சுதந்திரம் உண்டு.
எனவே அந்த மூன்று நாள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர்ல கூட அதிகமானவைகள் நான்தான் கேட்டிருப்பேன். அது என்னுடைய கடமை. என்னுடைய கடமையை நான் சட்டமன்றத்தில் செய்துதானே ஆக வேண்டும். அதிலும் நான் ஒரு மூத்த உறுப்பினர், அதனால நான் கேட்க வேண்டிய கேள்வியைத் தான் கேட்கணும். அது பிடிக்குதா பிடிக்கலையா, இல்ல நான் பேசவே கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.”
விசாரணைக்கு கட்டாயம் ஆஜராகுவீர்களா?
“நானே சொல்லி இருக்கிறேனே, 12ஆம் தேதிக்கு மேல எந்தத் தேதி கொடுத்தாலும் நான் ஒத்துழைப்பு தரேன்னு. அதனால நான் முழு ஒத்துழைப்பைத் தருவேன் அதுல ஒன்னும் மாற்றமில்லை. இரண்டாவது நீதிமன்றத்தில வழக்கு தொடுத்திருக்கிற காரணாத்தினால் அது சம்பந்தமா நான் பேச முடியாது.
அந்த வழக்கைத் நான் தொடுத்ததோட நோக்கமே நீதி என் பக்கத்தில் இருக்குது, நான் கட்டாயம் நீதிக்குத் தலை வணங்குவேன், நீதிமன்றம் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே அந்த அடிப்படையில் நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. அதனால நீதிமன்றத்துல வழக்கு தொடுத்திருக்கிறேன், நீதி மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
