விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த பனையூர் பாபு, கடந்த 24-ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று (ஜூன் 7) மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
இணைப்பு விழாவில் பேசிய பனையூர் பாபு , “சாதியின் பெயரை யாரும் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தந்தை பெரியார் அன்று எடுத்த முன்னெடுப்பால் தான், இந்த மண் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான மண்ணாகத் திகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக வந்த திராவிட மாடல் அரசு இருந்தது.எதற்காக இதை முக்கியமாகக் குறிப்பிடுகிறேன் என்றால், தலித் மக்களின் உண்மையான பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது நமது கழக அரசு தான்.
முன்பு, தலித் மாணவர்கள் அயலகம் சென்று படிக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 10 பேர் கூட பயனடையாத நிலை இருந்தது. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்த பிறகு, ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 410 மாணவர்கள் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தலா ஒரு மாணவருக்கு ரூ.36 லட்சம் வரைதிராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது. பெயரளவுக்கு மட்டுமே இருந்த ஒரு திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து, மக்கள் பயனடையும் வகையில் செய்த பெருமை நமது திராவிட மாடல் அரசுக்கே சேரும்.
அதேபோல், தலித் இளைஞர்கள் தொழில் தொடங்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம்’ தொடங்கப்பட்டு, இன்று பல இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். அதுமட்டுமின்றி, ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ‘அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டு, அங்குள்ள சாலை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
புலம்பல் அரசு
ஒரு கவர்ச்சியான அரசியலின் பின்னால் இன்று ஏதேதோ கட்டமைத்துக் கொண்டிந்தனர். ஆனால் எல்லாம் பொய் என்பதை மக்கள் வெறும் 30 நாட்களிலேயே உணர்ந்துவிட்டார்கள். நமது திமுக அரசுக்கும், இப்போது மாநிலத்தில் நடக்கும் அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து குழம்பிப் போய் இருக்கிறார்கள். நான் சொல்லவில்லை, மக்கள் தான் இதனை ஒரு ‘புலம்பல் அரசு’ என்று சொல்கிறார்கள்.
விவசாயிகள் இன்று புலம்பிக் கொண்டு, மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்திருக்கிறார்கள். பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் இன்று புலம்பி வருகின்றனர்.
மின்வெட்டு – பழிபோடும் அரசு
தற்போது ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினைக்குக் கூட திமுக தான் காரணம் என்று அவர்கள் பழி போடுகிறார்கள். நீங்கள் நிர்வாகத்தை முறையாகச் சீரமைக்காமல், நிர்வாகச் சீர்கேட்டோடு செயல்பட்டால் மின்வெட்டு வராமல் என்ன செய்யும்?
உதயநிதியின் கொள்கை உறுதி
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அது வேரோடு அழிக்கப்பட வேண்டிய ஒன்று. டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போன்றவற்றை விடக் கொடியது சனாதனம்’ என்றார். இதனால் வடமாநிலங்களில் பெரும் சர்ச்சை வெடித்து, அவரது தலைக்கு விலையும் பரிசும் அறிவித்தார்கள். பல மாநிலங்களில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், ‘இந்த வழக்குகளுக்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது, இதனைச் சட்டப்படி சந்திப்பேன்’ என்று அவர் உறுதியாக நின்றார்.
தற்போது அவர் எதிர்க்கட்சித் தலைவரான பிறகும் கூட, சனாதனத்தைப் பற்றி அவர் பேசியதற்கு இங்கும் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இத்தகைய உறுதியான கொள்கையோடு களமாடக்கூடிய நம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை நான் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். நம் தலைவரின் ஆணையை என்றும் செவ்வனே செய்து முடிப்பேன்.”
இவ்வாறு பனையூர் பாபு பேசினார்.
