மனமறிந்து பொய்யுரைக்கும் விஜய்: தற்காதலால் சீரழியும் தார்மீக நெறி!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை

வரலாறு மிகப்பெரிய வாய்ப்பை நடிகர் விஜய்க்கு வழங்கியுள்ளது. கட்சி ஆரம்பித்த இரண்டாண்டுகளிலேயே அவர் முதல்வராகப் பதவியேற்று விட்டார். அவர் ஊர், ஊராக பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து கட்சி அமைப்பை உருவாக்கவில்லை; மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லவில்லை. மணிக்கணக்காக பேசி, பக்கம் பக்கமாக எழுதி கொள்கைகளையும். இலட்சியங்களையும் பிரசாரம் செய்யவில்லை. தனது திரைநாயக பிம்பத்தை மட்டும் முதலீடு செய்து அதன் மூலம் முதல்வராகிவிட்டார்.

தி.மு.க ஆட்சியிலும், கட்சியிலும் இருந்த குறைபாடுகள், மக்களின் அதிருப்திதான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமென்று பலரும் பேசுவதைக் கேட்கலாம். அப்படியானால் எதிர்கட்சியான, ஐம்பதாண்டுகால வரலாறு கொண்ட அ.இ.அ.தி.மு.க-தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அந்த கட்சியைவிட தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கு என்ன செய்துவிட்டது? இந்த கேள்வியை சிந்தித்தால் விஜயின் கதாநாயக பிம்பமும், அந்த பிம்ப வழிபாட்டை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள், செல்பேசிகள் மூலம் பரவலாக அரசியல் பிரசாரமாக மாற்றியதும்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை ஐயம் திரிபுற புரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

எப்படியானாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் முதல்வர் பதவிக்கு வந்துவிட்டவர் அந்த சந்தர்ப்பத்தில் தன் ஆளுமையை உயர்த்திக் கொண்டு, பண்பட்ட தலைவராக தகவமைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அவர் அதற்கு நேர்மாறாக தன் குணக்கோளாறுகளை மீற முடியாதவராக, தேவையற்று பொய்யுரைத்து மலினமான அரசியலை செய்பவராகவே வெளிப்படுகிறார்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை கரூருக்குச் சென்று, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி பேசியதுதான் அவர் அரசியல் எவ்வளவு மலினமானது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதனை புரிந்துகொள்வதும், அவர் மீது பொதுமன்றத்தில் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்துவதும் எதிர்கால அரசியல் மேன்மைக்கு இன்றியமையாததாகும். காரணம் ஒரு விபத்தை சதி என்று சொல்வதன் மூலம் அரசியலில் தேவையற்ற ஒரு வெறுப்பை, வன்மத்தை அவர் வளர்க்கிறார்.

ADVERTISEMENT

கரூர் நெரிசல் மரணங்கள்: சட்டம் எப்படி பார்க்கும்?  

கரூர் நெரிசல் மரணங்கள் நேரலையில் பல்வேறு தொலைகாட்சி ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது நாடே பார்க்கும்படி பகிரங்கமாகத்தான் நிகழ்ந்தன. அந்த காணொலிகளைத் தொகுத்து விநாடிக்கு, விநாடி என்ன நடந்தது என்பதையெல்லாம் தொலைகாட்சிகள் ஒளிபரப்பிவிட்டன. அதனைக் கண்டவர்கள் அனைவரும் ஒன்றை உறுதியாகச் சொல்வார்கள். அது ஒரு விபத்து. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து.

அப்படி ஒரு விபத்து நிகழ வேண்டும். அப்பாவி மக்கள் 41 பேர் மரணமடைய வேண்டும் என்று யாருமே எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது உண்டு. சில சமயம் வன்முறையில் மரணங்களும் கூட நேரும். ஆனால் எங்குமே பொதுமக்களை பலியிடுவதில் யாருக்கும் பயன் இருக்க முடியாது.

ADVERTISEMENT

ஆனால், இந்த விபத்து நிகழ யாருடைய கவனமின்மையோ, அலட்சியமோ காரணமா என்பதை சட்டம் ஆராயத்தான் செய்யும். அதற்குத்தான் விசாரணை கமிஷன், காவல்துறை ஆய்வு, சிபிஐ விசாரணை எல்லாம். முதல் பொறுப்பு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத்தான் என்பதால் அவர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரசாரத்திற்கு வந்த தலைவர் விஜய் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதால் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை.

அப்படி விசாரணையில் கட்சி நிர்வாகிகள் கவனக்குறைவாக இருந்தார்கள், தக்க ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அறிக்கை கொடுக்கப்பட்டாலும், அதனை சட்டரீதியான குற்றமாக நீதிமன்றத்தில் சுமத்தி வழக்கு நட த்தி தண்டனை பெற்றுக் கொடுப்பது கடினம். காரணம், விபத்திற்கு எந்த ஒரு தனிப்பட்ட காரணத்தையும் திட்டவட்டமாகக் கூற முடியாது என்பதால், வழக்கு பல ஆண்டுகள் நடக்கும். இறுதியில் நீர்த்துப் போகும் எனலாம். 

காவல்துறை போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்றும் விசாரணையில் கூறப்படலாம். ஆனால் காவல்துறை அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் தெரிவித்த எண்ணிக்கையை விட கூட்டம் அதிகம் வந்ததால் எதுவும் செய்ய முடிவியல்லை என்று கூறினால் அது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படுவது கடினம்.

இறுதியில் தங்கள் அபிமான நடிகர் விஜயை பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் கூட்ட த்தில் நெரிசலை ஏற்படுத்தியவர்களும் பொறுப்புதான் என்றாலும் அவர்கள் யாரையும் அடையாளப்படுத்தி குற்றவாளிகளாக பதிவு செய்து வழக்கு நட த்த முடியாது. எனவே விசாரணை என்பது பெரும்பாலும் எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உதவக்கூடியதாகவே முடியும்.

தொடர்ந்து கும்பமேளா போன்ற மக்கள் பெருமளவு கூடும் நிகழ்வுகளில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. அம்மாதிரியான எந்த ஒரு விபத்திற்கும் யாரையும் குற்றவாளியாக்கி தண்டனை வழங்கப்பட்டதில்லை. வழக்கு பதிவு செய்வதும், விசாரிப்பதும் ஒரு பொறுப்புணர்வை தோற்றுவிக்கும் நோக்கில்தான் நடக்கும். பல்வேறு காரணங்களால் நடக்கும் இத்தகைய விபத்துகளில் யாரையும் குறிப்பாக தண்டிப்பது கடினம்.

தார்மீகப் பொறுப்பு

ஆனால் கரூர் நெரிசல் மரணத்திற்குத் தார்மீக பொறுப்பேற்கும் மாண்பு தொடர்புடைய அனைவருக்கும் இருக்க வேண்டும். அதில் முக்கியமானவர் விஜய்தான். ஏனெனில் அவரைக்காண வேண்டும் என்ற வெறியில்தான் அத்தனை பேர் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். மரங்களின் மீது. டிரான்ஸ்ஃபார்மர் மீது, கட்டிடங்கள் மீது ஏறினர். அவர் வாகனத்திற்கு அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்தில் உயிரிழந்தனர்.

விஜய் எல்லா ஊர்களுக்கும் வருகிறேன் என்று தொடர்பயண திட்டத்தை அறிவித்திருக்கலாம். அவரைக் காண்பது அபூர்வமல்ல என்பதை உணர்த்தும்படி பயண திட்டத்தை வகுத்திருக்கலாம். நான் எல்லா ஊருக்கும் வருவேன், உங்கள் அனைவரையும் நேரில் காண்பேன் என்று அறிக்கைகள், காணொலிகள் மூலம் தெளிவுபட கூறியிருக்கலாம்.

இரண்டாவதாக அவர் கட்சி அணியினருடன் முகாம்களில் பங்குகொண்டு அவருடன் நீண்ட நேரம் உடனிருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த அணியினர் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு தன்னார்வலர் படையை உருவாக்கியிருக்கலாம். ஒரு தலைவரின் முதல் கடமை தனக்கும் மக்களுக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான். அதனைச் செய்ய ஆயிரம் வழிகள் உண்டு. காந்தியிலிருந்து எண்ணற்ற தலைவர்கள் அதனைச் செய்து காட்டியுள்ளனர்.

அதற்கு மாறாக விஜய் தான் ஒரு ஊருக்குச் செல்வதை அபூர்வ நிகழ்வாக, ஊடகங்களால் பரபரப்பான நிகழ்வாக மாற்றப்படுவதை ஊக்குவித்தார். தன்னைக் காண பெரும் கூட்டம் வருவதை கூட்டக்காட்சி அரசியலாக மாற்ற விரும்பினார். விக்கிரவாண்டி மாநாடு தொடங்கி இதுவே அந்த கட்சியின் நடைமுறையாக இருந்தது. அவருடைய திரைப்பிம்ப கவர்ச்சியே கட்சியின் மூலதனம் என்று நம்பப்பட்டது. இது ஏன் என்பதை இறுதியில் காணலாம்.

விஜய்க்கு அடுத்து கட்சி நிர்வாகிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. கூட்டம் கூடினால், மணிக்கணக்காக காத்திருந்தால் மக்களுக்கு தண்ணீர் போன்றவை கிடைக்க வசதி செய்யவேண்டும். கூட்ட த்தை ஒழுங்குபடுத்த வேண்டும். காவல்துறை பாதுகாப்பு என்பது ஏதெனும் கலவரம் நடக்காமல் பார்த்துக்கொள்ளத்தான் பயன்படும். கூடும் மக்கள் தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்வது அவர்கள் கடமை, கட்சிக்கார ர்கள் கடமை.

ஆனால் விஜய் ரசிகர்கள் “அலப்பறை” செய்வதையே இலட்சியமாகக் கொண்டவர்கள் என்பதை அவர்களே காணொலிகளில் கூறியுள்ளனர். அவர்களை டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே இறங்கச் சொல்லி ஆனந்த், விஜய் ஆகியோர் கெஞ்சிக் கதறும் காணொலிகளும் உள்ளன. இந்த ஒழுங்கீனமான செயல்பாடுகளை எப்படி சரி செய்வது என்று கட்சி ஏதெனும் சிந்தித்துள்ளதா, என்ன முயற்சி செய்தது என்று தெரியவில்லை. இப்படியான கட்டுப்பாடற்ற கூட்டம் நெரிசலை ஏற்படுத்தும்போது எப்படி காவல்துறையால் கட்டுப்படுத்த முடியும்?

எப்படியோ பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. அதனை விஜயும் கட்சியினரும் எப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அதனையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கரூர் விபத்திற்குப் பிறகு விஜய், தவெக நிர்வாகிகள் என்ன செய்தனர்?

எப்படி சிந்தித்தாலும் விளங்காத மர்மம் ஏன் விஜயும், ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் விபத்திற்குப் பின் செயல்பாடுகள் இல்லாமல் முடங்கினார்கள் என்பதுதான். ஆதவ் அர்ஜூனா ஏதோ விளையாட்டுப் போட்டிக்காக டில்லி சென்றுவிட்டார் என்றார்கள். ஆனால் பிறர் யாருமே பொதுவெளியில் இல்லை; கரூரில் சம்பவ இடத்தில் யாருமே தங்கவில்லை. ஏன் இப்படி செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சம்பவ இட த்தில் வெளியேற வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா அந்த வாகனத்திலிருந்து கூறுவது பதிவாகியுள்ளது. அது சரிதான். ஆனால் திருச்சி சென்ற விஜய் அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கலாம். ஆதரவாளர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம். அங்கிருந்து முதல்வரையும், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கலாம்.

சரி, விஜய் இருந்தால் அவரைக் காண பலரும் கூடுவதால் பிரச்சினை ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், பொதுச்செயலாளர் ஆனந்த் கரூரில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டாமா? எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி ஆகியோருடன் அவரும் இணைந்துகொண்டு மருத்துவமனையில் செயல்பட்டிருக்கலாமே? பாஜக, அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் மிக்க நிர்மல் குமார் சம்பவ இட த்தில் இருந்திருக்கலாமே? இப்போது ஏதேதோ சதிக்கோட்பாடுகளை பேசுபவர் அன்றைக்கு களத்தில் நிற்காமல் எங்கே போனார்?

கட்சியே ஒட்டுமொத்தமாக முடங்கிப் போகும்படி என்ன நடந்தது? அவர்கள்தானே ஒவ்வொரு ஊரிலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்? இறந்தவர் குடும்பங்களுக்கான உதவிகளைச் செய்திருக்க வேண்டும்? கள ஆய்வு நட த்தி எப்படி நடந்த து என்று அறிக்கை அளித்திருக்க வேண்டும்? தவெக கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கரூருக்கச் சென்றன. பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தன.

விஜய் அன்றே இந்த விபத்திற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என்று பேசியிருந்தால் என்ன பிரச்சினை வந்திருக்கப் போகிறது? என்னைக் காண்பதற்காக வந்து உயிரை இழக்காதீர்கள் என்று மக்களுக்கு உருக்கமாக ஒரு கோரிக்கை வைத்திருந்தால் அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்குமே?

ஒருவேளை தார்மீகப் பொறுப்பேற்றால் சட்டப்படி தண்டிப்பார்கள் என்ற அச்சம் இருந்தால், அன்றைக்கே காவல்துறைதான் பொறுப்பு என்று கூறியிருக்கலாமே? அஸ்ரா கர்க் தலைமையிலான விசாரணைக் குழுவிடம் தங்கள் சந்தேகங்களைக் கூறி பகிரங்கமான அறிக்கையாக சமர்பித்திருக்கலாமே?   

விஜய் போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவரை இதுபோன்ற விபத்தைக் காரணம் காட்டி யாரேனும் கைது செய்ய முடியுமா? முடக்க முடியுமா? அப்படிச் செய்தால் அவருக்கான அனுதாபமும், ஆதரவும் பெருகி விடாதா? அப்படியும் தங்களை குற்றம் சாட்டுவார்கள் என்ற ஒரு சந்தேகம் இருந்தால் இன்றைக்கு வைக்கும் குற்றச்சாட்டுகளை அன்றைக்கே வைத்து பிரசாரம் செய்திருக்கலாமே?

விஜய் வைக்கும் வினோத குற்றச்சாட்டு 

விஜய் என்ன சொல்கிறார் என்றால் மெயின் ரோட்டிலிருந்து சம்பவ இடத்திற்கு காவல்துறைதான் என்னைக் கூட்டி வந்தது; நானும் அதற்கு நன்றி சொன்னேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்றேதான் கூட்டம் அதிகமாக இருந்தும் என்னை கூட்டி வந்திருக்கிறார்கள். அதுதான் சதிச்செயல் என்கிறார்.

அப்படி கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தால் அவர் கட்சி நிர்வாகிகள்தானே அவரிடம் கூற வேண்டும்? “விஜய்ணா, இங்க ரொம்ப கூட்டமா இருக்கு; நீங்க மெயின் ரோடிலிருந்து உள்ள வராதீங்க” என்று அவர்கள் கூறியிருக்கலாமே? 

அவர் பேசிய இட த்திற்கு ஐம்பது மீட்டர் முன்னாலேயே பேருந்தை நிறுத்தும்படி காவல்துறை கூறியதை பதிவு செய்துள்ளார்களே? அவர்கள் பேச்சைக் கேட்காமல் ஏன் பேருந்தை முன்னகர்த்தி நெரிசலை உருவாக்கினார்கள்? அப்படி காவல்துறை சொல்வது பொய்யென்றால் இத்தனை நாட்களில் அதனை மறுத்திருக்க வேண்டாமா?

இன்றைக்குக் காவல்துறை அவர் கட்டுப்பாடில்தானே இருக்கிறது? எப்படி தன் கட்டுப்பாட்டில் உள்ள துறைமீதே குற்றம் சாட்டுகிறார்? ஏதாவது விசாரணை செய்தாரா? யாரையாவது பணி இடைநீக்கம் செய்துள்ளாரா? ஒரு முதலமைச்சரே காவல்துறை சதி செய்த து என்று சொன்னால் அபத்தமாக இல்லையா?

அரசாங்கத்தின் தொடர்ச்சி (continuity of governance) என்பது மிக முக்கியமான அரசியல் அடிப்படையாகும். யார் ஆள்கிறார்கள் என்பது முக்கியமல்ல: அரசாங்கம் தொடர்ச்சியாக இயங்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அன்றைக்கும் காவல்துறை முதல்வர் கட்டுப்பாடில்தான் இருந்த து; இன்றைக்கும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இன்றைய முதல்வரே காவல்துறையை பழிசொல்வது அபாண்டமானது இல்லையா? மக்களுக்கு எப்படி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வரும்?

முன்னாள் பாஜக நிர்வாகியான இன்றைய தவெக அமைச்சர் நிர்மல்குமார் தி.மு.க சதிசெய்த து என்று கூறுகிறார். அப்போதே கேட்கப்பட்ட நொண்டிக்கேள்வியான செந்தில் பாலாஜி எப்படி அங்கே ஐந்து நிமிடத்தில் வந்தார் என்று கேட்கிறார். கரூர் என்பது சிறுநகரம். அங்கே காரில் ஏறி ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சம்பவ இடத்திற்கு வர எத்தனை நேரம் ஆகும்? இப்படி ஒரு விபத்து நடந்தால் சட்ட மன்ற உறுப்பினரான அவருக்கு உடனே செய்தி போகாதா?

அதைவிட இந்த கேள்வியின் அபத்தம் மற்றொன்று இருக்கிறது. ஒருவேளை செந்தில் பாலாஜியே காவல்துறையிடம் இப்படியெல்லாம் செய்யச் சொல்லி சொன்னார் என்றே வைத்துக்கொண்டாலும் அவர் எதற்கு அந்த ஊரில் அப்போது இருக்க வேண்டும்? அவர் கோவைக்கோ, சென்னைக்கோ சென்றிருக்கலாமே? நான் சம்பவ தினத்தன்று ஊரில் இல்லை; என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று கூறுவதுதானே சுலபம்? எதற்காக அவரே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, நிலைமையை கட்டுக்குக் கொண்டுவர பணியாற்ற வேண்டும்?

நிர்மல் குமார் ஜெயின் கமிஷன் தி.மு.க மீது ஐயப்பட்டது என்று கூறுகிறார். அதாவது தி.மு.க மீது என்ன பழிபோட்டாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறார். இவ்வளவு மலினமான அரசியலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வி.

தற்காதலால் விளையும் சீரழிவு!

உளவியலில் நார்சிஸம் என்று ஒரு பிரச்சினை உண்டு. கிரேக்க புராணத்தில் நார்சிசஸ் என்ற தேவன் தன் மிக அழகான உருவத்தை குளத்து நீரில் பார்த்து காதல் கொண்டு அது நிறைவேறா ஏக்கத்தில் இறந்துவிட்டான் என்று ஒரு கதை உண்டு. அதனால் தன்னையே காதலித்துக் கொள்ளும் குணத்திற்கு நார்சிஸம் என்று பெயர்.

திரைக்கதாநாயகர்கள் நார்சிஸத்தின் பூரண வடிவங்கள். அவர்கள் தங்களைப் பற்றியே பாடிக்கொள்வார்கள். “நான் யார் தெரியுமா?” “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட” என்றெல்லாம் சுயபுகழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவார்கள். தன்னைப் பற்றியே பஞ்ச் டயலாக் பேசிக்கொள்வார்கள். “நான் சொன்னா சொன்னதுதான்” என்பார்கள்.

இந்த தற்காதல் பிம்பம் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஏனெனில், அவர்களும் இந்த தற்காதலை தங்களுக்கானதாக மாற்றிக்கொள்வார்கள். கதாநாயக நடிகர் போலவே முடிவெட்டிக் கொள்வார்கள். சட்டை போட்டுக்கொள்வார்கள். சிலர் அவர்கள் போலவே வேடமிட்டுக்கொள்வார்கள். தங்களுடைய இயலாமையை தற்காதல் மூலம் சரிசெய்துவிடலாம் என நினைப்பார்கள்.

உள்ளபடி சொன்னால் எல்லா மனிதர்களிடமும் தற்காதல் இருக்கும். தற்புகழ்ச்சி என்பார்கள். சிறிதளவேனும் தன்னை புகழ்ந்துகொள்ளும் விருப்பம் அனைவருக்கும் இருக்கும். அது தவறில்லை. அதே சமயம் தன்னுடைய குறைகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருந்துவிட்டால் பிரச்சினையில்லை. “ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்க்கு” என்றார் வள்ளுவர்.

விஜயின் பிரச்சினை நடிகர் என்ற தற்காதலில் இருந்து வெளியே வர முடியவில்லை என்பதுதான். அதனால்தான் அவரால் கரூர் விபத்திற்கு வருந்துகிறேன்; பொறுப்பேற்கிறேன் என்று சொல்லிவிட்டு கடந்து போகமுடியவில்லை. கரூரில் அவர் தற்காதலின் உச்சத்தில் இருந்தார். மக்கள் வெள்ளம் தன் பேருந்தைப் பார்த்து ஆரவாரம் செய்வதைப் பார்த்துத் தன் இருக்கையின் மீதான விளக்கை அணைத்து, போட்டு விளையாடினார். பேருந்தின் மீது ஏறி பாடினார், பேசினார். அந்த நேரத்தில் நிகழ்ந்த விபத்து அவரது தற்காதல் மயக்கத்தை சிதைத்துவிட்டது. அவரால் அதனைத் தாங்க முடியவில்லை.

வேறு எந்த தலைவரானாலும் உடனே மனமார வருத்தம் தெரிவித்து, தார்மீகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கடந்த போயிருக்க க் கூடிய நிகழ்வை, விஜயின் தற்காதல் தனக்கெதிரான சதியாகத்தான் புரிந்துகொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களைக் கூட தனியாகத்தான் பார்த்து மன்னிப்புக் கேட்டார். பொதுவெளியில் மன்னிப்பு கேட்பது அவருக்குச் சாத்தியமில்லை.

கட்சியின் மூலதனமே கதாநாயக பிம்பமும், தற்காதலும்தான் என்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதை அனுசரித்தே பேசுகிறார்கள். பாஜக-வில் பயிற்சி பெற்ற நிர்மல் குமாருக்கு தி.மு.க மீது சதிக் குற்றம் சுமத்துவதில் உள்ள ஆர்வம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

அன்றைய முதல்வர் ஸ்டாலின் மிகவும் கண்ணியமாக கரூர் விபத்தைக் கையாண்டார். விஜயையோ, தவெக கட்சியையோ அவர் குற்றம் சுமத்தி பேசவேயில்லை. ஏன் தேர்தல் பிரசாரம் முழுவதும் அவர் விஜய், தவெக என்று குறிப்பிட்டு பேசவேயில்லை. அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களே அவரை விமர்சித்தார்கள். 

அ.இ.அ.தி.மு.க, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியும் கரூர் விபத்திற்கு விஜய் காரணம், தவெக காரணம் என்றெல்லாம் விமர்சித்துப் பேசவில்லை. யாருமே அந்த விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை. விஜயின் பிரசாரப் பயணங்களுக்கு அதீத விளம்பரம் கொடுத்த ஊடகத் துறை சார்ந்தும் கூட “நம் கையிலும் ரத்தம் படிந்திருக்கிறது” என்ற பொறுப்பேற்புதான் வந்தது.

இப்படி அனைத்துத் தரப்பும் பெருந்தன்மையாக அணுகிய விபத்தை, இன்று முதல்வராக பதவி வகிக்கும் விஜயும், அவர் கட்சியனரும் சதி என்று கூறி, தி.மு.க-வை குற்றம் சாட்ட முயல்வது தற்காதலால் சீரழியும் தார்மீக நெறி என்றுதான் கூற வேண்டும். இந்த போக்கு இளைஞர்கள் மனதை மேலும் பாழாக்கிவிடும். தமிழகத்தின் அரசியல் முதிர்ச்சிக்கு பின்னடைவையே தோற்றுவிக்கும் என்பதால் அனைவரும் விஜயின் போக்கினை கண்டிப்பது அவசியம்.  

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share