2026 போல 2031ல் ஆட்சி மாற்றம் வரும் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
போதையில்லா தமிழகம் என்ற பெயரில் வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு இன்று (ஜூலை 12) பொள்ளாச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை,
”நாம் தலைவர்களை கண்டுபிடிக்க வேண்டும். உங்களையெல்லாம் மேலே கொண்டு வர வேண்டும். உங்களுக்கான பிளாட்பார்ம் இது. எத்தனையோ பேர் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறீர்கள்.. தயவு செய்து நம்முடைய வீ த லீடர்ஸ் அமைப்பை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிறு வேலையாக இருந்தாலும் பெரு வேலையாக இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி 1924இல் ஒரே முறை காங்கிரசினுடைய தலைவராக பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி பொறுப்பிலேயே இல்லை. ஆனால் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றினார்.
எனவே பொறுப்பு வரும்… அது ஒரு அடையாளம். பொறுப்பு என்பது ஒருங்கிணைப்பதற்கு தேவைப்படக்கூடிய ஒரு கருவி தான்.
ஆனால் பொறுப்பே இல்லாமல் வீ த லீடர்ஸ் அமைப்பினுடைய ஒரு தன்னார்வலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 50 லட்சம் மரங்கள் வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பொள்ளாச்சி சாலையில் சென்றால் இரு பக்கமும் புளியமரம் இருக்கும். ஆனால் அதையெல்லாம் வெட்டி விட்டார்கள்.
எனவே அடுத்தடுத்த மாதம் புளிய மரத்தை வைப்போம். அதை வளர்ப்போம். நமது காலத்தில் அது வளரவில்லை என்றால் கூட நமது குழந்தைகளின் காலத்தில் வளர்ந்திருக்கும்.
நாம் செய்யக்கூடிய எத்தனையோ தீர்வுகள் அடுத்த தலைமுறைக்கு உதவியாக இருக்கும். அதையும் செய்வோம்.
தமிழகத்தினுடைய மாற்றம் என்கிற வார்த்தையில், பெண்களுடைய முன்னேற்றம் என்கின்ற வார்த்தையில் நாம் இணைந்து இருக்கின்றோம்.
இந்த வீ த லீடர்ஸ் அமைப்பு, மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். இந்தியாவில் இந்த மாதிரி நடந்ததே இல்லை. கட் அவுட், போட்டோ எல்லாம் வைத்து ஒரு தலைவர் இருப்பார், அப்படித்தான் ஒரு இயக்கம் கட்சி நடந்து இருக்கிறது.
இந்தியாவில் ஒரு இயக்கத்தை கஷ்டப்பட்டு காலத்தை தாண்டி அரசியல் கட்சியாக உருவாக்கி 50 ஆண்டு 60 ஆண்டு அரசியல் கட்சியாக இருந்து படிப்படியாக சேவை செய்த சரித்திரம் இந்த மண்ணில் இல்லை. அதை நாம் உடைக்கப் போகிறோம்.
நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை கீழிருந்து எடுத்து, அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து, தலைமை பண்பு கொடுத்து, கீழே விழும் போது கைபிடித்து தூக்கி விட்டு அவர்களுக்கான மேடையை கொடுத்து, அவர்களை மக்கள் முன்பு நிற்க வைத்து வேட்பாளர்களாக மக்கள் ஓட்டை அவர்களுக்கு கொடுக்க வைத்து, அவர்களை அமைச்சர்களாக சட்டமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக அழகு பார்த்து அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அமைப்பு.
அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறப்போகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தற்போது தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 2.25 கோடி ரேஷன் கார்டு இருக்கிறது. இதை கணக்குப் போட்டால் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 4.25 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இவ்வளவு கடன் இருந்தால் பிரம்மாவே வந்தாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.
வேறு விதமாக வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடன்கார மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும்.
தமிழக வெற்றி கழக அரசு அடுத்த ஆண்டு 80 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்க போகிறது. இந்த ஆட்சி முடியும் போது 14 லட்சம், 15 லட்சம் ரூபாய் கடன் இருக்கத்தான் போகிறது. அதை நாம் சரி செய்ய வேண்டும்.
பவருக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தை தொடங்கவில்லை. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
39 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதுபோல 2031லும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” என்று கூறினார்.
