ஜானகி அம்மா எனும் ஜலதரங்கம்!

Published On:

| By ஸ்ரீராம் சர்மா

S. Janaki: The Melodic Resonance of Jalatarangam
  • ஸ்ரீராம் சர்மா

என்ன ஒரு கொடுவினை இது?

இரவெல்லாம் அவரது பாடல்களைத்தானே கேட்டுக் கொண்டிருந்தேன். காலையில் எழுந்தவனின் காதில் ஓங்கி அறைந்து விட்டானே கருணையே இல்லாத அந்தக் காலன்!

ADVERTISEMENT

உலகச் செவிகளைச் சுநாதமாக வருடிக் கொடுத்த அந்த ஓம்காரக் குரல் ஓய்ந்து விட்டதாமே! ஏறத்தாழ ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடிக் கொடுத்த அந்தக் குயில், மைசூரில் மௌனமாகி விட்டதாமே!

மனிதப் பிறவியெடுத்தால் மரணம் நிச்சயம்தான் என்றாலும், இதுபோன்ற மறைவுகளை மனம் ஒப்ப மறுக்கிறது. காலனைக் காறித் துப்பச் சொல்கிறது.

ADVERTISEMENT

செம்மாந்த பாடகி அவர் என்பதைக் கடந்து, தாய்மை சுமந்த மனுஷியாகவே அவருடன் நான் பழகியிருக்கிறேன். அவர் பாட ஒப்புக்கொண்ட சில ஆல்பங்களுக்கு பாடல்கள் எழுதும் வரமான வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன்.

பாடல்கள் எழுதுவது போதும் என்று நான் நிறுத்திக் கொண்டிருந்த காலம் அது. மறைந்த இசையமைப்பாளர் அரவிந்தன் சார் மற்றும் வேலூர் சாந்தி ஆடியோ உரிமையாளர் ப்ரேம் இருவரும் என் வீட்டுக்கு வந்து எழுதக் கேட்டார்கள். மறுத்தேன்.

ADVERTISEMENT

“மூன்று ஆல்பங்களுக்கு மொத்தமாகப் பணம் கொடுத்து விடுகிறேன்,” என்றார் ப்ரேம்.

“இல்லை தம்பி, போரடித்துவிட்டது. விட்டு விடுங்கள்,” என்றேன்.

“பாடப் போவது யார் தெரியுமா? ஜானகி அம்மா…” என்றார் அரவிந்தன் சார்.

துள்ளி எழுந்தேன்.

“கடவுளே! அந்த ராட்சசியின் குரலுக்கா நான் எழுதப் போகிறேன்? எப்போ கம்போசிங்?” என்றேன்.

“நீங்கள் ஓகேன்னா, இப்பவே வெச்சுக்கலாம்ணே…” என்றார் தம்பி ப்ரேம்.

திருவல்லிக்கேணியில் ஓடுகள் வேய்ந்த அந்த மாடி வீட்டில் என் ஆர்மோனியத்தைக் கொண்டு வந்து வைத்தேன். கலகலவெனக் கொட்டின அரவிந்தன் சாரின் மெட்டுகள். மளமளவென வந்து விழுந்தன எனது பல்லவிகள்.

அத்தனையும் ஒருவருக்காக! ஒரு குரலுக்காக! ஒரே ஆளுமைக்காக!.

சாதாரண ஆளுமையா அது? ஒரு சகாப்தத்தை ஆட்சி செய்த ஜலதரங்கமல்லவா அந்தக் குரல்!

எஸ்.எம். சுப்பையா நாயுடு முதல் இசைஞானி இளையராஜா வரை, எந்த இசையமைப்பாளரின் இசைக்குள் நுழைந்தாலும் அந்தக் குரல் தன்னியல்போடு ஸ்வரங்களுக்குள் புகுந்து கலீரென்றல்லவா ஒலித்தது.

“சிங்கார வேலனே தேவா”, “பானல்லு நீனே”, “சுகம்… சுகம்”, “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” போன்ற எண்ணற்ற பாடல்கள் அதற்குச் சாட்சியாகின்றதே!

நிழல்கள் படத்தில் இடம் பெறவில்லை என்றாலும், கௌரி மனோகரி ராகத்தின் இதயத்தை இடம்பெயர்த்து வைத்த “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” என்னுமந்தப் பாடலை அந்தப் பெருமாட்டி எப்படியெல்லாம் பிழிந்து பிழிந்து பாடிக் கொடுத்திருக்கிறார்! எத்தனை இரவுகளில் அதனை மீண்டும் மீண்டும் கேட்டு மயங்கியிருக்கிறேன்!

எத்தனை எத்தனை புகழ் மேடைகள்! தேசிய விருதுகள்! மாநில விருதுகள்! கரகோஷங்களை அள்ளி அள்ளிக் குவித்த ஆதர்சப் பாடகியல்லவோ அவர்! ஜானகிக்கு மயங்காதவன் இராமன் ஆவனோ!

வடபழனியில் அமைந்திருந்த ஸ்ரீ ஆடியோ ஸ்டூடியோவில் குரல் பதிவு என்றார்கள். அங்கு செல்லும் வரை எஸ். ஜானகி என்பவரை ஒரு பாடகியாகத்தான் நான் வரித்துக் கொண்டிருந்தேன்.

வழக்கம்போல பாடல் வரிகளை எடுத்துச் சொல்ல ‘வாய்ஸ் பூத்’ திற்குள் நுழைந்த என்னை வாஞ்சையோடு நிமிர்ந்து பார்த்து,

“வாப்பா… உக்காரு. மொள்ள மொள்ளமா சொல்லு… எழுதிக்கிறேன்…” என்றபடி தனது பெரிய டைரியை விரித்து, பேனாவை ஏந்தியபடி ஒரு முதல் மாணவியைப் போல ஆவலோடு என்னை நோக்கினார்.

அந்தக் கண்களில் கண்ட தாய்மை என்னை அசரடித்தது. சட்டெனக் குனிந்து ஆசி வாங்கினேன்.

“நெல்லாயிருப்பா…” என்று தெலுங்கு பூசிய தமிழில் என் முன்னுச்சித் தலையை மெல்லத் தடவிக் கொடுத்தார். கை கூப்பிக் கொண்டேன்.

தயங்கியபடியே முதல் பாடலின் பல்லவியைக் கொடுத்தேன். மெல்லத் தெலுங்கில் எழுதிக் கொண்டவர், “சரணம் கொடுக்கலையே…” என்றார்.

குறுக்கே வந்த அரவிந்தன் சார் கரங்களைப் பிசைந்தபடி,

“அம்மா, பல்லவி பாடிக் கொடுங்கள். அதற்குள் சரணம் எழுதித் தந்து விடுவார். இந்தாளுக்கு இதே வழக்கம். யாராலும் மாத்த முடியலம்மா…” என்றபடி சிரித்தார்.

கொஞ்சமும் கோபப்படாமல், “சரி…” என்று மைக்கை நோக்கிச் சென்றார் ஜானகி அம்மா.

அன்று அவர் பொழிந்த குரலைக் கேட்டு சிலிர்த்துப் போன எனக்கு ஏழெட்டு சரணங்கள் மளமளவென வந்து விழுந்தன.

வார்த்தைகளுக்குள் இல்லாத விவரங்களை வெளிப்படுத்தியபடி வெகு  அனாயசமாகப் பாடிக் கொடுத்தார் ஜானகி அம்மா.

மதிய உணவுக்குச் சென்றவர் வீட்டிலிருந்து திரும்பும்போது கையோடு சில புகைப்பட ஆல்பங்களைக் கொண்டு வந்தார்.

ஸ்டூடியோ ஹாலில் என்னை அருகே அமர்த்திக் கொண்டு ஒரு சிறு குழந்தையைப் போல அவற்றைக் காட்டிக் காட்டிக் குதூகலித்தார்.

ஒரு ஆல்பத்தில், ஆந்திராவில் இருந்த தனது சிறுவயது வீட்டின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். மற்றொன்றில், தனது கணவரின் பேண்ட்-ஷர்டை அணிந்துகொண்டு ஒய்யாரமாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பேராளுமைக்குள் இப்படி ஒரு குழந்தையா என்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன இப்படிப் பாக்குற? இன்னும் பாரு…” என்றபடி அடுத்த ஆல்பத்தை எடுத்துக் காட்டினார்.

அதில், அவரது வீட்டின் மொட்டைமாடியில் அவரது தோழிகளுடன் கூடி, அவரவர் கணவர்களின் உடைகளை அணிந்துகொண்டு வீட்டில் நடக்கும் விஷயங்களை நடித்துக் காட்டியபடி கொண்டாடிய புகைப்படங்கள் இருந்தன.

இரண்டு நாகப்பழங்களை என்னிடம் நீட்டினார்.

“கொட்டையைத் துப்பாதே… அப்படியே கடிச்சு சாப்பிடு… ரொம்ப நல்லது…” என்றார்.

தான் ஒரு பிரபலம் என்னும் தோரணை அவரிடம் கிஞ்சித்தும் இல்லாதது கண்டு நாணிப் போனேன்.

காலையில் அவரது குரலால் பீடிக்கப்பட்ட நான், மதிய இடைவேளையில் தனியே அமர்ந்து அவர் அடுத்துப் பாட வேண்டிய மற்ற பாடல்களுக்கான பல்லவி, சரணங்களை எழுதி முடித்து மொத்தமாகக் கொடுத்திருந்தேன்.

சிரித்தபடியே அவற்றை மெல்ல எழுதிக் கொண்டவர்,

“இது நல்ல பிள்ளை… இதைப் போய் தப்பா சொல்றீங்களே…” என்றவர், அரவிந்த் சாரைப் பார்த்து பளிச்செனக் கண் சிமிட்டியபடியே வாய்ஸ் பூத்தை நோக்கி ஒரு பேரரசி போலக் கம்பீரமாக நடந்துச் சென்றார்.

ஆங்கே, இசையமைப்பாளர் அரவிந்த் சார் சற்றே கோடு கிழித்து வைத்த கல்யாணி ராகத்தை – அதன் ஆலாபனையை – மந்திர ஸ்தாயியில் இருந்து உச்ச ஸ்தாயி வரை கொண்டு சென்று அலசினார். பிரமித்து நின்றிருந்தேன்.

அதன் பின் சில ஆல்பங்களுக்கு அவரோடு வேலை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

கருவாடு காயப் போடும் வெயில் மாதத்தின் மத்தியான வேளையில், கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த மாளிகை போன்ற அவரது நீலாங்கரை வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார்.

அதன் பால்கனியில் கடலைப் பார்த்தபடி நின்றுகொண்டு தனது உறவுகள் குறித்த ஆதங்கங்களை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.

கரங்களைக் கட்டியபடி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கொட்டி முடித்த பின் என்னை உற்றுப் பார்த்தவர் வெடுக்கெனக் கேட்டார்:

“இவ்வளவு சொல்றேனே… எனக்கு எதனா ஒரு வழி சொல்றியா பாரு?”

“எனக்கு அவ்வளவு விவரம் தெரியாதம்மா!”

“ஹை… இவ்வளவு எழுதுறியே… விவரம் தெரியாமலா?”

“விவரம் தெரிஞ்சிடுச்சின்னா எழுத முடியுமா அம்மா?”

கலகலவெனச் சிரித்தவர் தாவி வந்து கட்டி அணைத்துக் கொண்டார்.

அந்தக் கலகலப்பான சிரிப்பு இன்று மரணமென்னும் மாமலை மீது மோதி மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

காலமெனும் மாமரத்தின் உச்சிக் கிளையில் ஒய்யாரமாக நின்றபடி, “பூவரசம்பூ பூத்தாச்சுஎனப் பாடிய அந்த மானுடக் குயில் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், அதன் குரல் என்றென்றும் உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஆம்அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் நாதத்திலும், அடியேனின் முன்னுச்சித் தலையைத் தடவி அளித்த அந்த ஆசீர்வாதத்திலும், ஜானகி அம்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.

சில மனிதர்கள் இறப்பதில்லை.

அவர்கள் நினைவாக மாறுகிறார்கள்.

ஜானகி அம்மா!

என்னுள்ளோடிப் போனதோர்  

நீங்கா நினைவு!

Photo of author
ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா, எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share