உலகக் கோப்பையும் ஃபிஃபாவும்!

Published On:

| By எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை

2026 உலகக் கோப்பைக் கால் இறுதிக்கு முந்திய ஆட்டத்தில் எகிப்து அணி அர்ஜென்டினாவிடம் உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததற்கு, பாரபட்சமான முடிவுகளே காரணம் என்று பலர் வாதிடுகின்றனர்.

இது குறித்து எகிப்து முறையாகப் புகார் அளித்துள்ளது. இந்தப் போட்டி, பொறுப்புக்கூறலுக்கான மேலும் பல கோரிக்கைகளை வைக்கத் தூண்டியுள்ளது. மேலும், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளையும் எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், காஸா மக்களுக்கு ஃபிஃபா வழங்கி வரும் கொடுமைகளில், எகிப்து எதிர்கொண்டது ஒரு சிறு பகுதி மட்டுமே.

ADVERTISEMENT

அரசியலும் விளையாட்டும்

“விளையாட்டிலிருந்து அரசியலை அகற்றுங்கள்” என்பது  நமக்கு மிகவும் பழக்கப்பட்டுப்போன (உண்மையில் புளிச்சுப்போன) மாய்மால முழக்கமாகும். நம்மில் பெரும்பாலோர் நடக்கக் கற்றுக்கொண்ட காலத்திலிருந்தே, இந்த முழக்கம் முதன்மை  ஊடகங்கள் மூலம் உலகின் மீது அடிக்கடி திணிக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

உலகக் கோப்பைக்கான கால்  பந்துப்  போட்டிகளை நடத்தும் ஃபிஃபா (federation Internationale de Football Association) அமைப்பு, பாரபட்சமற்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து, பழிக்கு அப்பாற்பட்ட அமைப்பாகத் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு போதும் நிறைவேற்றப்பட்டதில்லை.

அதன் மீதும் – முக்கியமாக அதன் முன்னாள் தலைவர்கள் பலர் மீதும் – எண்ணற்ற ஊழல் புகார்களும் பாரபட்ச நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் எழுப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஆனால் அவர்களின் தலைகளில் உள்ள  ஒரு மயிர்கூட பிடுங்கப்பட்டதில்லை. (இப்போது அதன் தலைவராக உள்ள கியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) தலை முழுவதும் சொட்டை என்பது வேறு விஷயம்!) இப்போது நாம் சொல்ல விரும்புவதெல்லாம் ஃபிஃபாவின் தலைவர்கள், நிர்வாகிகள், ஆட்டங்களில் நடுவர்களாக உள்ளவர்கள், போட்டிகளை நடத்துவதற்கான ஏலங்களில் அதிகத் தொகை கொடுத்து வாய்ப்புகளை வாங்கிய நாடுகளின் தலைவர்கள் முதலியோர் தங்கள் செயல்கள் மூலம் வெளிப்படுத்தியது என்னவென்றால், நாம் எந்த அரசியலைப் பற்றிப் பேசுகிறோம் என்பதைப் பொறுத்து, அதற்குரிய அரசியல் மிக தாராளமாக அனுமதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது என்பதுதான்.

உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஃபிஃபா அடையாள அரசியலைத் திணிப்பதில் எந்தப் பிரச்சினையும் கொண்டிருக்கவில்லை. இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு  (ஈரானுக்கும் எகிப்துக்கும்) இடையேயான ஒரு போட்டியை, அந்த அமைப்பு தனக்குப் பெருமை தரக்கூடிய (Pride Match) போட்டியாக மிக  வசதியாகத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் அந்த நாடுகளுக்கிடையிலும் அவற்றின் கால் பந்தாட்ட அணிகளுக்கு இடையிலும் பிளவுகளைத் தூண்டியது. இது தவிர,ஈரான் அணியை ஒரு  சில நாள்களுக்கு மேல்  தன் நாட்டில் தங்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டதால், அந்த அணி  மன உளைச்சல் ஏற்படும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஃபிஃபா அமைப்பு உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முழுமையான தடை விதிக்க உடனடியாகச் செயல்பட்டது. பின்னர், காஸாவில் இனப்படுகொலை செய்ததற்காகவும், பாலஸ்தினிய கால்பந்து வீரர்களைக் குறி வைத்துக் கொன்றதற்காகவும் இஸ்ரேலைத் தண்டிக்கும் நேரம் வந்தபோது, ஃபிஃபா இஸ்ரேலைத் தடை செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பு ஆட்சிக்குத் தனது ஆதரவை மேலும் வலுப்படுத்தவும் முடிவு செய்தது.

இஸ்ரேல் நடத்தி வந்த இனக்கொலையைத் தடுத்து நிறுத்துதல் என்ற பெயரில், ஏகாதிபத்திய நாடுகள் காஸாவையும் அதன் கடலோர எண்ணெய் வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக டொனால்ட் ட்ரம்ப்  உருவாக்கிய, கேடுகெட்ட ”அமைதி வாரியம்”  (Board of Peace) என்று அழைக்கப்படும் அமைப்புடன் இணைந்து, காஸா பகுதிக்குள் புதிய கால்பந்து அகாதமிகளையும் மைதானங்களையும் கட்டுவதற்கான திட்டங்களுக்கு 75 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியது ஃபிஃபா.

மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு மனிதாபிமானச் செயல் போலத் தோன்றலாம். ஆனால் அந்த ’அமைதி வாரியம்’ நடுநிலையான அமைப்பு அல்ல; அது, முற்றுகையிடப்பட்ட காஸா பிரதேசத்தை அதன் பூர்வீகக் குடிகளிடமிருந்து முழுமையாகப் பறிக்கும் கொடூரமான கோடீஸ்வரர்கள் கால் பந்து போட்டிகளைப் பார்த்து இரசிப்பதற்காக விளையாட்டு மைதான மறுசீரமைப்புக்கான முன்மாதிரியைச் செயல்படுத்த முயல்கிறது.

அதிகார அடிபணிதலும் அநீதியும்

ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவும்கூட ’அமைதி வாரிய’த்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டதுடன், பகிரங்கமாக அமெரிக்கத் தொப்பியை அணிந்திருந்தார்: டொனால்ட் டிரம்பிற்கு “ஃபிஃபா அமைதிப் பரிசை” வழங்கினார்! அதன்பின் உலகக் கோப்பைப் போட்டி அறிவிக்கப்பட்டன. ஆனால் அது தொடங்குவதற்கு முன்பே இனவெறி சர்ச்சைகள் ஆரம்பமாகின. அமெரிக்காவின் எண்ணற்ற அநீதிகளுக்கும் பாரபட்சமான முடிவுகளுக்கும் எதிராக இன்ஃபான்டினோ குரல் கொடுக்கவில்லை; மாறாக, அமெரிக்க தேசிய அணியைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரருக்கு நடுவரால் கொடுக்கப்பட்ட சிவப்பு அட்டையை ரத்து செய்யுமாறு ட்ரம்ப் எழுப்பிய கூச்சலுக்கு அடிபணிந்து அந்த சிகப்பு அட்டையை ரத்து செய்தார். 

மெஸ்ஸிக்கு உலகிலுள்ள கோடிக்கணக்கான இரசிகர்களில் நானும் ஒருவன். இருப்பினும் சில இலட்சம் மக்களையே கொண்டுள்ள ஆப்பிரிக்க நாடான கேப் வெர்தெவுக்கும் அர்ஜென்டினாவுக்கும்  நடந்த போட்டியின்போது அந்தக் குட்டி நாட்டு அணிதான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். அந்த அணி தனது அபாரமான விளையாட்டுத் திறனைக் காட்டி இரண்டு கோல் போட்டது. அர்ஜெண்டினாவை வெளியேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது ஆட்ட நேரத்தின் கடைசி நிமிடத்தில் அர்ஜெண்டினா ஒரு கோல் போட்டுவிட்டது. ஆக அர்ஜெண்டினா அணி ‘மயிரிழையில்’ தப்பித்தது எனக் கூறலாம்.

அர்ஜெண்டினா அணிக்கும் எகிப்திய  அணிக்கும் கால் இறுதி ஆட்டத்திற்கு முந்திய ஆட்டம் நடந்த போது எகிப்திய அணி அடித்த இரண்டாவது கோலை அந்த ஆட்டத்தின் நடுவர் வீடியோ காட்சியின் அடிப்படையில் இரத்து செய்துவிட்டார். எனவே தலா இரண்டு கோல்களை அடித்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தபோது அர்ஜெண்டினா அணி மூன்றாவது கோல் அடித்தது. ஆனால் அது எகிப்திய விளையாட்டு வீரரொருவர் மீது அர்ஜென்டினா வீரர் விதிகளை மீறிய உடல்ரீதியான தாக்குதலை நடத்தி அடித்த கோலாகும். அதற்கு வீடியோ காட்சியைக் கேட்டுப் பெற்று (VAR) அந்த கோலை நடுவர் இரத்து செய்யவில்லை. அது அப்பட்டமான, தெள்ளத்தெளிவான அநீதி.

எகிப்து அணி அடித்த இரண்டாவது கோல் இலட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன் நிகழ்ந்தது. ஆனால் அதை இரத்து செய்வதில் நடுவருக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அவரது நேர்மையற்ற செயலின் காரணமாக அந்தப் போட்டியின் முடிவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகவும்(match fixing) எகிப்திய அணிக்கு பெரிய வாய்ப்பொன்று மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அந்தப் போட்டிகளின் நடுவர்களின் தலைவர் எகிப்து அணிக்கு இழைக்கப்பட்ட அநீதியை  நியாயப்படுத்தினார்.

அது மட்டுமின்றி அர்ஜெண்டினா இரசிகர்களின் அப்பட்டமான இனவாதத்தையும் விளையாட்டு மைதானத்தில் காண முடிந்தது. எகிப்தைத் தொடர்ந்து அர்ஜெண்டினா முதல் கோல் அடித்தபோது, அந்த அணியின் இரசிகர்கள் அருகிலிருந்த எகிப்திய இரசிகர்களை  இனரீதியாக இழிவுபடுத்தும் சொற்களால் விளித்தது மட்டுமின்றி அவர்கள் மீது பீர் டப்பாக்களையும் வீசிய காட்சி உள்ள வீடியோவை ‘தி ஒயர்’ நாளேடு வெளியிட்டது.

அந்த இரசிகர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் கையில் இஸ்ரேலின் கொடியும் இருந்தது. இனரீதியான வசவுகளோ, பேச்சுகளோ, நடத்தைகளோ இருக்குமானால், சம்பந்தப்பட்ட அணியின் பயிற்சியாளர் அதை நடுவருக்குத் தெரிவிக்க ஒரு சைகையைச் செய்ய வேண்டும் (இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, அவற்றைக் குறுக்கு நெடுக்காக வைக்க வேண்டும்)  என்பது ஃபிஃபா வகுத்துள்ள விதிகளிலொன்று. ஆனால் எகிப்திய அணியின் பயிற்சியாளர் அந்த சைகையைச் செய்தபோது அவருக்கு ஒரு மஞ்சள் கார்டு கொடுத்தார் நடுவர்!

இவை எல்லாவற்றைக் காட்டிலும், ஃபிஃபா இழைத்துள்ள மிகப்பெரிய குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி ’காஸாவுக்கான அமைதி வாரிய’த்துடன் அது கொண்டுள்ள ஈடுபாடுதான்.  காஸாவில் உலகத் தரமான கால் பந்து விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ஃபிஃபா அதற்கான உள்கட்டமைப்பு எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து பாலஸ்தினியர்களிடம் கலந்தாலோசிக்கவோ அல்லது அனுமதி கேட்கவோ இல்லை;

மாறாக, பாலஸ்தினிய உறுப்பினர் ஒருவர்கூட இல்லாத அதன் நிர்வாகக் குழு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. அதாவது காஸாவில் இஸ்ரேலிய ஜயனிஸ்டுகள் இழைத்துவரும் இனப்படுகொலைக்கு வெகுமதி அளிக்கிறது; டொனால்ட் ட்ரம்ப்பை, முற்றுகையிடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நபராக மாற்றுகிறது; சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காவின் தலைமையில் அங்கு சர்வாதிகாரத்தை நிறுவும் திட்டத்திற்கு உதவியளிக்க முன்வந்துள்ளது.

ஃபிஃபாவும் அதன் தலைவரும் பிற நிர்வாகிகளும் இந்த நடவடிக்கையை மனிதாபிமானத் தொண்டு என்று காட்ட எவ்வளவுதான் முயற்சி செய்து வந்தாலும், காஸாவிலுள்ள யதார்த்த நிலையை உலக மக்கள் அறிவர். காஸாவில் கால் பந்தாட்ட மைதானத்தையும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளையும் கட்டுவதற்கு, அங்குள்ள பாலஸ்தின மக்களின் ஆதரவையோ அல்லது ஐ.நா. அவையின் ஒப்புதலையோ பெறுவதற்கு மாறாக, காஸா மீது தொடர்ந்து இஸ்ரேல் குண்டுவீசுவதற்காக ஆயுதங்களை வழங்கும் அமெரிக்க அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பில் நிதியை முதலீடு செய்ய ஃபிஃபா ஒப்பந்தம் செய்துள்ளது.

ட்ரம்ப் அறிவித்த ‘போர் நிறுத்தத்திற்குப் பிறகும்கூட  இஸ்ரேல், காஸாவில் குழந்தைகள், நோயாளிகள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட சாமானிய மக்களைக் கொன்றுள்ளது. இப்போதும் கடந்த காலத்திலும் இஸ்ரேல் இழைத்த ஆயிரக்கணக்கான போர்நிறுத்த மீறல்களைப் பற்றி வாய் திறக்காத ஃபிஃபா ஜியோனிச பாசிஸ்டுகளுக்கு மறைமுக உதவி செய்கிறது. 

இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், டொனால்ட் ட்ரம்ப்பின் ‘அமைதி வாரியம், தன் உறுப்பினர்கள் அனைவருக்கும், அதனுடன் இணைந்த பிற அமைப்புகளுக்கும் சட்டப் பாதுகாப்பை நாடுகிறது. இதன் மூலம், பாலஸ்தினியர்களைக் கொல்வதற்கோ, காயப்படுத்துவதற்கோ அவர்கள் பொறுப்பேற்க முடியாது – இது அவர்களுக்குக் கொலை செய்வதற்கான உரிமத்தை வழங்குகிறது. இதுதான் கியானி இன்ஃபான்டினோ கொண்டாடிய, பெருமை பேசிய, பகிரங்கமாக விளம்பரப்படுத்திய திட்டம்.

’விளையாட்டுகளிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்’ என்ற வாதத்தை இனி ஒருபோதும் யாராலும் நம்பகத்தன்மையுடன் முன்வைக்க முடியாது; குறைந்தபட்சம் ஃபிஃபா தனது அதீத அரசியல்மயமான நடத்தையை முழுமையாக நிறுத்தி, தன்னை மறுசீரமைத்து, காஸா மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கும் வரை இது சாத்தியமில்லை.

இது ஒருபுறமிருக்க இந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் முன்பு இல்லாத அளவிற்கு ஆசிய, ஆப்பிரிக்க, மத்தியக் கிழக்கு நாடுகளின் அணிகளும் தென்னமெரிக்காவிலுள்ள ஏழை நாடுகளின் அணிகளும் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம். கேப் வெர்தெவின் மக்கள் தொகை பதினேழரை இலட்சம். ஈக்வோடோரில் அரை இலட்சம்.

ஒரு துணைக்கண்டம் போல் இருக்கும் இந்தியாவில் கால்பந்து மீது விருப்பம் கொண்டுள்ளவர்கள் இலட்சக்கணக்கிலுள்ளனர். ஆனால் அரசாங்கமும், ஊடகங்களும், தனியார் நிறுவனங்களும் கிரிக்கெட்டை மட்டுமே ஊக்குவிக்கின்றன. அது பொது புத்தியிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. கால் பந்தாட்டத்திற்கு சிறிதளவே கவனம் தரப்படுகிறது.

மெஸ்ஸி vs யமால்

பெரிய மைதானங்கள் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்கூட விதிவிலக்கான சிலவற்றைத் தவிர, கால்பந்தாட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இந்திய மாநிலங்களைப் பொருத்தவரை கால்பந்தாட்டத்திற்கு மதிப்பும் கவனமும் முன்னுரிமையும் செலுத்துபவை மேற்கு வங்கமும் கேரளமும்தான்.

கோப்பைப் போட்டிக்கான விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலருக்கு சுவாரசியமாக இருந்த ஒரு செய்தி:

ஸ்பெயினுள்ள பார்சலோனா அணியில் சேர்ந்த மெஸ்ஸியின் இருபதாம் வயதில் (2007), அவரும் இதர விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. யுனிசெஃப் அமைப்புக்கும் மனிதாபிமான உதவிகள் செய்யும் வேறு சில நிறுவனங்களுக்கும் நிதி திரட்டித் தருவதற்காக பார்சலோனா அணியை உருவாக்கிய நிறுவனம், அந்தப் புகைப்படங்களின் அச்சுப் பிரதிகளைக் கொண்ட நாள்காட்டியைத் தயாரித்து விற்பனை செய்தது.

ஒரு புகைப்படம் மெஸ்ஸி, ஐந்து மாதக் கறுப்பினக் குழந்தை லைமெய்ன் யமாலை (Lamine Yamal) ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் குளிப்பாட்டுவதைக் காட்டுகிறது. ஏழு வயதிலிருந்து கால்பந்தாட்டம் ஆடும் யமால், 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் அணியின் முக்கிய விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார். ஒருவேளை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆடுமானால், இரு பெரும் வீரர்களின் மோதலையும் காணமுடியும்.

FIFA World Cup 2026 Argentina Egypt Controversy - by SV Rajadurai

Photo of author
எஸ்.வி.ராஜதுரை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share