“சொந்த வாழ்வில் தாங்க முடியா துயரம்…”எஸ்.ஜானகி குறித்து மனம் திறந்த இளையராஜா

Published On:

| By Pandeeswari Gurusamy

S.janaki

பாடகி எஸ்.ஜானகி மறைவிற்கு இசைஞானி இளையராஜா இன்று (ஜூலை12) இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார்.

ADVERTISEMENT

இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெருமைக்குரிய பாடகி ஜானகி அம்மா அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். இச்செய்தி எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவர் தனது சொந்த வாழ்வில் எத்தனையோ தாங்க முடியாத துக்கங்களையும், நிகழ்வுகளையும் கடந்து வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

உலக அளவில் மாமேதைகளாகத் திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், இதுபோல ஏதோ ஒரு வகையில் துக்ககரமானதாகவே இருந்திருக்கிறது என்பதுதான் இதுவரை நடந்துள்ளது.

ADVERTISEMENT

கடின உழைப்பாளி

ஆனால், ஜானகி அம்மா அவர்கள் தனது அசாத்திய திறமையால் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதைத் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் தொடர்ந்து நிரூபித்துக் காட்டியவர். அவர் ஒரு மிகச்சிறந்த கடின உழைப்பாளி.

நான் ஒரு பாடலை உருவாக்கும்போது, ஒவ்வொரு வாத்திய இசையையும் எவ்வளவு அக்கறையோடு கவனித்து, நான் நினைத்த வடிவத்தைக் கொண்டு வர விடாப்பிடியாக உழைப்பேனோ, அதேபோல் அவரிடம் ஒரு பாடலைச் சொல்லிக் கொடுத்தால், எனது கடின உழைப்பிற்கு இணையாக, ஏன் அதற்கு மேலாகவே விடாப்பிடியாக நின்று பாடி முடிக்கும் உழைப்பைக் கொண்டவர் அவர்.

ADVERTISEMENT

பன்முகத்தன்மை

அவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது, சிறந்த கம்போசராக திகழ்ந்தவர்; பல பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது இந்த மறைவு, ஒட்டுமொத்த இந்தியத் திரைப்பட சங்கீத உலகிற்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பேரிழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share