பாடகி எஸ்.ஜானகி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்: கர்நாடக அரசு அறிவிப்பு; முதல்வர் விஜய் இரங்கல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் தனது காந்தக் குரலால் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையிசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுகளும் சாதனைகளும்:

சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ள எஸ். ஜானகி, 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் முதல் அனிருத் வரை தலைமுறை கடந்த முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த காலங்களில் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது அறிவித்தபோது, “இந்த விருது எனது 55 ஆண்டு கால இசை அனுபவத்திற்கு மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது” என்று கூறி, அதை ஏற்க மறுத்து தனது வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:

வயது மூப்பு காரணமாக மறைந்த அவரது உடல், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு, ‘கனியனகுந்தி’ என்ற இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. ஜானகி அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் விஜய் இரங்கல்

பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

ADVERTISEMENT

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share