‘மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால்..’ தவெக அரசுக்கு ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajendra balaji

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ADVERTISEMENT

“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நம்மை விட அதிகமாகப் புகழ்ந்தவர்கள் இன்று கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்கள். அதிமுகவிற்குத் துரோகம் செய்துவிட்டு வெளியேறியவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வப் போகிறார்கள்.

ஒரு சாதாரணத் தொண்டன் கட்சி மாறிப் போனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், கட்சியின் பெயரில் முழுமையான பொருளாதார வசதிகளை பெற்ற முன்னாள் அமைச்சர்கள், தவெகவிற்குச் சென்று நாடகமாடுகிறார்கள். அவர்கள் மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவில் இணையும் காலம் விரைவில் வரும்.

ADVERTISEMENT

அதிமுகவினர் தவெகவில் இணையவில்லை – அது ஒரு செட்டப்:
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணைந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. அது ஒரு திட்டமிட்ட ‘செட்டப்’. தவெகவினர் இப்போது வேஷம் கட்டி ஆடுகிறார்கள்; அவர்களது ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அவர்களுக்குச் சங்கு ஊதுவார்கள்.

தவெகவிற்குப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், அவர்கள் தனிப் பெரும்பான்மையுடன் 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? வெறும் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி அமைத்துள்ளது.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வரை அவமதிப்பதா?

இந்த நிலையில் கரூரில் தவெகவினர் ஆட்டம் போடுகிறார்கள். சென்னை மாநகர மேயராக, துணை முதல்வராக, தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினைக் ‘கொத்து பரோட்டா’ போடுவோம் என்று முதல்வர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

நானும் அரசியல் ரீதியாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளேன். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவர்கள் பேசியதற்குப் பதிலடி கொடுத்துள்ளேனே தவிர, ஒருபோதும் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் நான் பேசியதில்லை.

மதயானைக்கு நிகரான திமுகவையே அரசியல் களத்தில் அடக்கி ஆண்டவர்கள் நாங்கள். எங்களைப் பார்த்துத் துரோக சக்தி என்று கூற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆட்களைப் பார்க்காமல் மக்கள் வாக்களித்த தேர்தல் இது. அதற்காக இந்த நாட்டை உங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்களா?

வரலாறு கண்டதுண்டா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நேரத்தில் கோபம் வருகிறதோ, அந்த கணமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அவருக்கு கோபம் வரும் வரைதான் உங்கள் ஆட்சி நீடிக்கும். இதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார். இதனால் தவெகவின் ஆட்சி இன்னும் மூன்றாண்டுகள் மட்டுமே நீடிக்கும். ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலையில் இருக்கும்போது, கரூரில் வந்து இப்படி டான்ஸ் ஆட வேண்டுமா? இது நியாயமா, நேர்மையா?

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் ஒருவரை எப்படித் தார்மீகமாக விமர்சிக்க வேண்டும்? அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, விமர்சனங்கள் எப்போதுமே சாத்வீக முறையில், நாகரிகமாக இருக்க வேண்டும். ‘ஓடு ஓடு’ என்று ஒரு முதலமைச்சர் இப்படிப் பேசியதை தமிழக வரலாறு கண்டதுண்டா?

காமராஜர், பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அத்தனை பேரையும் நாம் முதலமைச்சர்களாகப் பார்த்துள்ளோம். இவர்களில் யாராவது இப்படிப் பொதுமேடையில் வசைபாடி இருக்கிறார்களா?

ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்திருப்பதாகத் தெரிந்தால், நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, முன்னாள் முதலமைச்சரை இப்படித் தனிப்பட்ட முறையில் வசைபாடுகிறார் என்றால், இவர் பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகிறார் என்றுதான் அர்த்தம்.” என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share