முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மீது நிலத்தை ஆக்கிரமித்ததாக சென்னை பரங்கிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் சமீபத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர், “கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பரங்கிமலையில் உள்ள எனது 5,500 சதுர அடி நிலத்தை தேர்தல் பணிமனைக்காக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உதவியாளர் வந்து கேட்டார். அதன்பேரில், 6 மாத கால குத்தகை ஒப்பந்த அடிப்படையில் அந்த இடம் வழங்கப்பட்டது.
ஆனால், குத்தகை காலம் முடிந்த பிறகும் அவர்கள் இடத்தை காலி செய்து தரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகையும் தராமல் இழுத்தடித்து வந்தனர். இது குறித்து அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போலியான முகவரியைக் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. தற்போது அந்த நிலத்தை அவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை நேரில் சந்தித்தார். அப்போது, அந்த நிலத்தை ஒரு வாரத்தில் தன்னிடம் விற்றுவிடுமாறும், அதற்கான பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை என்றும், எனக்கு நிலமே தேவைப்படுகிறது என்றும் நான் உறுதியாகக் கூறிவிட்டேன். இதையடுத்து, ஒரு வாரம் கழித்துப் பேசுவதாகக் கூறிச் சென்றவர், அதன் பிறகு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.”என புகார் அளித்திருந்தார்.
காவல்துறை நடவடிக்கை:
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்த இந்த புகாரின் அடிப்படையில் பரங்கிமலை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் ஆகிய மூவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
