கோவை பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதலாவது மாநாட்டில், கேள்வி கேட்ட புதிய தன்னார்வலர் ஒருவருக்கு பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் கட்சியிலிருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அண்மையில் பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகளுக்கு வி.வி.ஐ.பி (VVIP) அந்தஸ்தும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட புதிய தன்னார்வலர் ஒருவர், “மாநாட்டிற்காக களத்தில் உழைத்த புதியவர்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுக்கு மட்டும் ஏன் இந்த வி.வி.ஐ.பி உபசரிப்பு?” என்று அமைப்பாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னார்வலரின் இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த கோவை பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, அந்த இளைஞரை நோக்கி கடுமையான வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “எங்களைப் பற்றிக் கேள்வி கேட்க நீ யார்? உன்னை அப்படியே உரித்துத் தொங்கவிட்டுவிடுவேன்” என்று பாலாஜி உத்தமராமசாமி தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, பகிரங்கமாகக் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சமூகத்தில் புதிய தலைவர்களை உருவாக்கப் போவதாகக் கூறி நடத்தப்பட்ட மாநாட்டில், நியாயமான கேள்வி கேட்ட இளைஞரை மூத்த அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு மிரட்டியது மாநாட்டு வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், “இதுதான் புதிய தன்னார்வலர்களுக்கு ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் கொடுக்கும் மரியாதையா? இந்த லட்சணத்தில்தான் புதிய தலைவர்களை உருவாக்கப் போகிறார்களா?” எனப் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
