முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தவெக அரசும் முதல்வர் விஜய்யும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் மாளிகை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக சென்னையில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டார் என்பதற்குத் கடந்த 4ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் வைகோவின் பேச்சை வைத்துப் புகார் கொடுத்துள்ளோம். அதேபோல், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். அதில், ”என்னை தவெகவுக்கு வருமாறு அழைத்தார்கள். அதனால் நான் வந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் குதிரை பேர ஊழலுக்குத் தகுந்த ஆதாரங்கள் எனச் சுட்டிக்காட்டும் வகையில் திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசியது உண்மைக்கு மாறாகவும், கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக சிபிஐ-யிடமும், கரூர் வழக்கைக் கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதியிடமும் மனுவாகக் கொடுத்துள்ளோம்.விஜய் உண்மைக்கு மாறாகத்தான் பேசி வருகிறார்.
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் ‘கொத்து பரோட்டா’ என முதல்வர்விஜய் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.எடப்பாடி பழனிசாமி இன்று தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார். விஜயபாஸ்கர்கள் அதிமுகவில் போய் தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள் எனப் பேசியிருக்கிறார். விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால், இனி நாங்களும் பேச வேண்டி வரும் ” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அவரிடம், இந்த 6 மாதத்தில் தவெக ஆட்சி இருக்காது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ”அவர் அவரது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்” என்றார்.
மேலும், இனிமேல் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் குறித்துப் பேச வேண்டாம். இதற்குப் பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சினைகள் பேசப்படாமல், திசை திரும்பிவிடுகிறது.இப்படித்தான் கடந்த தேர்தலின்போது செத்த பாம்பை அடித்துவிட்டு, கருநாகத்தை விட்டுவிட்டோம். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம்” என்றார்.
