தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 35 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற பாமதான் காரணம் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின. ஆனாலும் கூட நாம் மலை போல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது என்பதை பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் ஓய்வெடுக்கவில்லை. நமது மக்கள் பணி முன்பை விட வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பது நமது 46 ஆண்டு கால கோரிக்கை ஆகும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரை மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறோம். இதை விட மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கக் கூடிய நற்செய்தி பாட்டாளிகளாகிய நமக்கு இருக்க முடியுமா?
தமிழ்நாட்டின் பெரும்பான்மையினர் என்றால் அது விவசாயிகள் தான். அவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்; இனியும் அத்தகைய குற்றங்கள் நடக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு உயிர்பயத்தைக் காட்டும் அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்; மதுக்கடைகள் மட்டுமின்றி, சந்துக்கடைகளையும், போதைப் பொருள்கள் விற்பனையையும் முற்றிலுமாக ஒழித்து இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்பனவற்றுக்கான நமது குரல் சட்டப்பேரவையில் ஒங்கி ஒலித்திருக்கிறது. அதன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?”என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அதிமுக தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”47 தொகுதிகளில் அதிமுக வெற்றி என பழனிசாமி பெருமையாக சொல்கிறார். அதில் வட மாவட்டங்களில் 31 தொகுதிகளில் அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லையென்றால், சேலத்தில் எடப்பாடி தொகுதியில்கூட அவர் தப்பித்தவறி தான் வென்றிருப்பார்.
பாமக இல்லையென்றால் வடமாவட்டங்களில் அதிமுக வென்றிருக்க முடியாது. சேலத்தை தவிர்த்து பாமக இல்லையென்றால் 7,8 தொகுதிகளில் தான் அதிமுக ஜெயித்திருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை, இந்த உண்மையை ஒப்புக்கொண்டு சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” என காட்டமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
