தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பத்துடனேயே தவெக-வில் இணைந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
இந்த அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தவெக நிர்வாகிகள் தங்களை அணுகியதால்தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்பு கூறியிருந்தார். இதற்கான தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக நீதிமன்றத்தை நாடும்” என்று எச்சரித்திருந்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுப்பு:
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழக வெற்றிக் கழகத்தில் சேருமாறு வற்புறுத்தியது கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தான். அதன் பின்னரே மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி, அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டு இந்த முடிவை எடுத்தோம்.
பெரும்பாலான நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில்தான் நாங்கள் தவெக-வில் இணைந்தோம். எங்களை அங்கு இணையச் சொல்லி யாரும் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. முற்றிலும் சுயவிருப்பம் மற்றும் எங்களுடைய நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்தோம்.”என்றார்.
முன்னதாக தவெக நிர்வாகிகள் தன்னை அணுகியதாகப் பேசியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, விருப்பத்தின் அடிப்படையில்தான் இணைந்தேன் என்று விளக்கமளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
