தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை டாக்டர் கிருஷ்ணசாமி இன்று ஜூலை 13-ந் தேதி சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நம் இந்தியத் திருநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாறும் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ‘மாண்டேகு’ திட்டத்தின்படி, 1921-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழக சட்டமன்றம்’ மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அவ்வளவு பாரம்பரியமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, கடந்த 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நிறைவுற்றது. மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது.
தேர்தல் முடிவுகளின்படி, தவெக 107 இடங்களில், திமுக கூட்டணி 59 இடங்களிலும், அதிமுக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றிபெற்ற சூழலில், தனிப் பெரும்பான்மை பெற்றும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க தவெக அழைக்கப் பெறவில்லை.
பிற அணிகளில் வெற்றிப் பெற்ற கட்சிகளின் ஆதரவுடன், மே 10-ஆம் தேதி முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அஇஅதிமுகவின் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான உறுப்பினர்களே அஇஅதிமுகவிலிருந்து பிரிந்து ஆதரவு அளித்ததால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என அஇஅதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும், அச்சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பு நடவடிக்கையிலிருந்து தற்காத்துக் கொள்ள மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததால், அதனை ஏற்றுக்கொண்டு அஇஅதிமுகவும் அவர்களை மன்னித்துக் கடிதம் வழங்கியதால் அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனினும், அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்வதும், பின்னர் ஆளும் கட்சியில் இணைவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது.
இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.
தினம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். 2026 பொதுத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்காக மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்பட்டுள்ளது.

இப்போது ராஜினாமா செய்துள்ள உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தினால், அரசுக்கு பெரும் பொருட்செலவுதான் ஏற்படும்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உறுப்பினர்கள், மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மாறாக, அவமதிக்கும் வகையில் எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இதுபோன்ற செயல்களை நாம் இப்போது அனுமதித்தால், ”எதிர்காலத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பதே அர்த்தமற்றதாகிவிடும்; ராஜினாமா செய்து ஆளுங்கட்சியிடம் ஆதாயப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்ற எண்ணம் உருவாகி விடும். இத்தகையச் செயல்களை மிகப்பெரிய “அரசியல் குதிரைப் பேரமாகவே” கருத வேண்டும்.
எனவே, தமிழகத்தின் ஆளுநர் என்ற மாபெரும் அந்தஸ்தின் அடிப்படையில், தாங்கள் தலையிட்டு, ராஜினாமா செய்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் அழைத்து அதற்கான விளக்கத்தைக் கேட்க வேண்டும்.
மேலும், கடந்த 10.07.2026 – வெள்ளிக்கிழமை அன்று, சென்னை உயர் நீதிமன்றம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேறு வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ’இடைத்தேர்தல்’ நடத்தத் தடை விதித்துள்ளது. அந்தத் தடையானது எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் இப்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் அசாதாரணமானது. வெற்றி பெற்ற இரண்டு மாதத்தில் உடனடியாக ஆளுங்கட்சிக்கு அணி மாறுவதைக் குதிரை பேரமாகக் கருதி, இப்படியான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சட்ட ரீதியான தீர்வை காணும் வகையிலும்,
- ராஜினாமா செய்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் அழைத்து அதற்கான விளக்கத்தை தாங்கள் கேட்க வேண்டும்
- நியாயமற்ற அரசியல் குதிரை பேரக் காரணங்களுக்காக, ஆளும் கட்சியின் பதவிகளைப் பெறுவதற்காக இவர்கள் செய்யும் ராஜினாமாவை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்
- கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இதுபோன்ற மோசடிச் செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும்; அதுவரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும்; தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றத் தன்மைக்கு ஒரு தீவிர நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் உரிய பரிந்துரை செய்ய வேண்டுமென மேதகு ஆளுநர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி, ஆளுநரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
