மத்திய பாஜக அரசின் ‘சர்ச்சை’ மசோதாக்களுக்கு திமுக ஆதரவா? கி.வீரமணி திடீர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

DMK's Stance on Union BJP Govt Bills: DK Chief K. Veeramani's Warning

”மத்திய பாஜக அரசின் சர்ச்சையான மசோதாக்களுக்கு திமுக ஆதரவு அளிக்கப் போவதாக ‘வதந்தி’ பரப்பப்படுகிறது; இத்தகைய சூழலில் தி.மு.க (DMK) தலைமை நிச்சயம் முழு உறுதியுடன், தனது லட்சியப் பாதையில் மாறாப் பயணத்தில் நிலைத்து நின்று வென்று காட்டும் என்பதை நாடு அறிய வேண்டும்” என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்றத் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13-ந் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

ADVERTISEMENT

அதிபர் ஆட்சி முறையை நோக்கி…

மற்ற கூட்டத் தொடர்களைவிட, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பெரும் பொறுப்பாளர்கள் அத்துணைப் பேரும் பதவியேற்பின்போது, பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினையே புறந்தள்ளி, அதன் முக்கிய தனித்தன்மையான அடையாளத்தினையே மாற்றி, ஜனநாயகக் குடியரசு என்பதையும், மக்களிடம் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை (Basic Structure of the Constitution) அடிக்கட்டுமானத்தையே அடியோடு மாற்றி, (கரையான் அரித்த நூலின் வெறும் அட்டை போல் ஆக்கிட பெரும் முயற்சி நடக்கிறது.) பார்லிமெண்டரி முறைக்குப் பதிலாக, அதிபர் முறைக்கு ஈடாக, பிறகு ஒரு ‘‘சர்வாதிகாரத்திற்கு’’ நாடாளுமன்ற முறை மூலமே ஏற்பாடு செய்யும் ஒரு சூழ்ச்சித் திட்டமாக்குவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் கால்கோள் விழா நடத்திட முனைகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு.


வித்தைகள் மூலம் ஆட்சி அதிகாரம்

பாபர் மசூதியை இடித்து அயோத்தி கோயில் திட்டத்தை நிறைவேற்றியதுபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்கள் மூலம், அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, பன்வகைக் கலாச்சாரம், மொழி, நாகரிகம், பல சமூகங்கள் – மக்கள் வாழும் நாட்டினை, மூன்று முறை இந்திய ஜனநாயக அரசால் தடை செய்யப்பட்டு, பிறகு பேச்சுவார்த்தை – உறுதிமொழி மூலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட – அவ்வப்பொழுது உருமாற்றம் (Camouflague) நடத்தி ‘வித்தைகள்’, ‘வியூகங்கள்’ மூலம் தந்திரம், சூழ்ச்சிமூலம் ஆட்சியைப் பிடித்த ஓர் இயக்கமாம் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஒற்றை மதம் – தன் மதம் – ஹிந்து மதம், ஒற்றை மொழி தம் மொழி – சமஸ்கிருதம், ஹிந்தி, ஒற்றைக் கலாச்சாரம் தமது கலாச்சாரம் – ஆரியக் கலாச்சாரம் முதலியவற்றை வைத்து, ஆளத் திட்டமிட்டுக் காய் நகர்த்திடும் வகையில், சட்டத் திட்டங்களையே நிறைவேற்றிட முயற்சிக்கிறது.
வியூகம் வகுக்கும் பாஜக

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்டத்தில், முக்கிய திருத்தங்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3 – Two thirds majority) உறுப்பினர்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெற முடியாவிட்டாலும், கட்சிகளை உடைத்தும், இணைத்தும், வேறு சில எதிர்க்கட்சிகளைத் திரிசூலங்களான வருமான வரித்துறை, சி.பி.அய்., அமுலாக்கத் துறை மூலம் அச்சுறுத்தியும், மற்றும் ‘‘பஞ்சு மிட்டாய்களைக்’’ காட்டியும், தனது இலக்கை அடைய நாளும் வியூகம் வகுத்து வருகிறது!

‘ஹிந்துராஷ்டிரம்’ நோக்கி..

அதற்கு, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்தான் அதிமுக்கியம். ஆர்.எஸ்.எஸ். தத்துவகர்த்தா கோல்வால்கர் கூறியபடி, மாநிலங்களே இல்லாத (கூட்டாட்சிக்குப் பதில்) ஒற்றை ஆட்சி – Unitary ஆட்சியை நிலை நிறுத்தி, மாநில அதிகாரப் பறிப்பை, கல்வி, உணவு, ஆளுமை போன்ற பல துறைகளிலும் ஏற்படுத்தி, ‘ஹிந்துராஷ்டிரம்’ அமைக்க, ஏற்பாடுகள் சட்டத்தைக் கருவியாக்கி, சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறித்துவ சமூகத்தினரின் குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை, கல்வி, மருத்துவக் கொடை உரிமை உள்பட அனைத்தையும் பறிக்கும் சட்டங்கள் – திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டும், நிறைவேற்றப்படவுமான ‘வியூகம்’ வேக வேகமாகத் திட்டமிடப்பட்டுள்ளன!

ADVERTISEMENT

33% இடஒதுக்கீடு மசோதா

முன்பு மூன்றில் இரண்டு பங்கு கிட்டாத காரணத்தால், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம், அசாம் போன்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்போதே அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினைக் கூட்டி, 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவோடு திட்டமிட்டே – தொகுதி மறுவரையறை மசோதாவையும் பொருத்தமில்லா இணைப்பாக்கி, ஆழம் பார்த்து, அம் முயற்சியில் தோற்றனர்.

அதனால், தி.மு.க.வுக்குத் தனி மரியாதை இந்தியா முழுவதும் ஏற்பட்டது! பா.ஜ.க. திட்டம் தோற்கடிக்கப்பட்டது. அது தெரிந்தே தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று அதனைத் தேர்தலின்போது நடத்தியது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி.

புதிய சர்ச்சை மசோதாக்கள்

தற்போது கல்வித் திட்டத் திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், ஏழை உணவு பாதுகாப்புச் சட்ட மசோதா (திருத்தம்) போன்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அத்துடன், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் ஒரு மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் தம் பதவியை இழந்தவுடனே சிறையில் அடைக்கப்படுவதற்கான (ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் வேறு வடிவங்களில் இது நடந்து வரும் நிலையில்) புதிய வியூகமும் வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு முழுமையான சட்ட சம்மதம் பெற்றுத் தரும் புதிய வியூகம் முதலியன வரவிருக்கின்றன.


பாஜக மசோதாக்களை திமுக ஆதரிக்கும்?

மற்ற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிளவுபடுத்தியது – காரணம் வெளிப்படை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பொருளாகவோ அல்லது குதிரை பேரம் பேசுபவர்களாகவோ ‘அவதாரம்’ எடுக்க வைக்க முடியாது என்று தெரிந்தும், அவர்களது பெயரைக் கெடுக்கத் திட்டமிட்டு, தி.மு.க.விற்குக் களங்கம் ஏற்படுத்த மறைமுகமான ஏற்பாடுகள் நடந்துவிட்டதுபோல, ஒரு திட்டமிட்ட முறையில் ஒரு வதந்தி, பரப்புரை (Whispering Campaign) இணையதளம் மற்றும் ஆரிய ஏடுகள் வழி நடத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் தி.மு.க தலைமை நிச்சயம் முழு உறுதியுடன், தனது லட்சியப் பாதையில் மாறாப் பயணத்தில் நிலைத்து நின்று வென்று காட்டும் என்பதை நாடு அறிய வேண்டும்.


திமுக மீது பழி போட சதி..

சில ஆரிய பார்ப்பன ஏடுகளும், ஊடகங்களும், தி.மு.க.விற்கு ஒரு ‘பழி’ ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரத்தினைச் செய்கின்றனர். ‘‘நாடாளுமன்றத்தில், அதன் நிலைப்பாடு முந்தையது போல இருக்காது’’ என்று கூறுவதை,
‘‘பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போகும்படி’’ காட்டும் என்பதை உரிமையுடன் நம்புகிறோம்.
தனித்தனியாக நின்றாலும், ஒரே முடிவில் வென்று காட்டவேண்டிய தருணம் இது!

அனைத்து எதிர்க் கட்சிகளும், ‘‘யார் வரக்கூடாது’’ என்பதையே ஒரே திட்டமாக்கி, தனித்தனியாக நின்றாலும், ஒரே முடிவில் வென்று காட்டவேண்டிய தருணம் இது! அலட்சியம் காட்டினால், ‘இந்தியா’ இருக்காது; மாறாக, ‘ஹிந்துயா’தான் இருக்கும்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share