பண மோசடி வழக்கில் பி.டி அரசகுமார் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்படாத தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார் கடந்த மாதம் இறுதியில் கைது செய்யப்பட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை அவர் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
தனியார் பள்ளிகளிடம் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அரசகுமார் பணம் பெற்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் 55 க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதால் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி நேற்று (ஜூலை 13) அரசகுமார் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் 20க்கும் அதிகமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
