கரூர் அருகே இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் விஜய் முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை மலையப்ப நகரைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்பெண்ணிற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரான வரகூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு எதிரே நின்றுகொண்டு பாலியல் ரீதியாக சைகைகள் காட்டுவது, அவர் வீட்டிற்குச் செல்லும்போது பின்தொடர்ந்து தவறாகப் பேசுவது என ரமேஷ் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண், இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவரே அவரை வேலைக்கு அழைத்துச் செல்வதையும், திரும்ப அழைத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் வராததால், அப்பெண்ணை அழைத்துச் செல்ல அவரது தங்கை வந்துள்ளார். வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பியபோது, ரமேஷ் அவர்களை வழிமறித்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அப்பெண் உடனடியாகத் தனது உறவினர்களுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்களும் அங்கிருந்த பொதுமக்களும் இணைந்து ரமேஷை பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல்துறையினர், ரமேஷை மீட்டு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொதுமக்களால் தாக்கப்பட்ட தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குளித்தலை அருகே இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணைக் கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்குச் சுயஒழுக்கம் குறித்துப் பாடம் எடுக்கட்டும்.”
இவ்வாறு கனிமொழி தனது பதிவில் சாடியுள்ளார்.
