தேர்தல் வழக்கில் அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் லாட்டரி தொழிலதிபர் மாட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், திமுக வேட்பாளர் பாரிவள்ளல் ஆகியோரை தோற்கடித்தார்.
இந்த நிலையில் லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “வேட்பு மனு தாக்கலின் போது லீமா ரோஸ் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். தொழிலதிபரும் கணவருமான மார்ட்டினின்,
ஐ. மார்ட்டின் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மாடர்ன் & கிரியேட்டிவ் கன்ஸ்ட்ரக்டர் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் பிரைவேட் லிமிடெட்,
எல்எம்எஸ் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் லேண்ட்ஸ்கேப் பிரைவேட் லிமிடெட்,
ஹால் மார்க் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்,
டாமினன்ட் வில்லாஸ் அண்ட் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட்
ஆகிய நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருப்பதை மறைத்துள்ளார்.
எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று ( ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.
அப்போது 7 நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதை மறைத்தது தொடர்பாக லீமா ரோஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
