திமுகவை எதிர்ப்பதில் அதிமுக எப்போதும் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டுக்களவாணி அல்ல; இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து, தனது கட்சியில் இணைத்துக் கொண்ட முதல்வர் விஜய் தான் உண்மையான களவாணி” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான முறையில் சாடியுள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இச்சூழலில், கடந்த 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “அதிமுகவும் திமுகவும் கூட்டுக்களவாணிகள்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்தில் இன்று (ஜூலை 14) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“கடந்த 10-ஆம் தேதி கரூரில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திமுகவும் கூட்டுக்களவாணிகள் என்று குறிப்பிட்டுள்ளார். அது எவ்வளவு பெரிய வார்த்தை! ஒரு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு இவ்வளவு பெரிய வார்த்தையைப் பயன்படுத்துவது முறையானதா என்பதை அவர் சிந்திக்க வேண்டும். பொதுவெளியில் எந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கு நிதானம் தேவை.
அதிமுக ஒருபோதும் கூட்டுக்களவாணி அல்ல. தமிழக முதல்வர் விஜய் தான் களவாணி. அதிமுகவின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை, குதிரை பேரம் மூலம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து, உடனடியாகத் தனது தவெக கட்சியில் இணைத்துக் கொண்டாரே, அந்த முதல்வர் விஜய் தான் உண்மையான களவாணி. மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் பிரதிநிதிகளை முறைகேடாகத் தன் பக்கம் இழுத்த அவர்தான் களவாணித்தனம் செய்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து, “திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைக்கலாம்” என்று டி.டி.வி. தினகரன் பேசியது குறித்த கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்லும் கருத்துதான் எங்களது அதிகாரப்பூர்வ கருத்து. மற்றவர்களின் கருத்துகளை எங்களுடன் இணைத்துப் பேசக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். எங்களைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது ‘தீய சக்தி திமுக’ என்று சொல்லிதான் தொடங்கினார். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் இன்று வரை உறுதியாக உள்ளோம்.
சுமார் 195 இடங்களில் நான் எழுச்சிப் பயணம் மேற்கொண்டேன். அப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளைத்தான் சுட்டிக்காட்டினேன். ஐந்து ஆண்டு காலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன், அப்போதும் சட்டமன்றத்தில் பேசும்போது இதே கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் பேசினோம். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது” என்றார்.
மேலும், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவை பொறுத்தவரை அவர்களைப் போல் குறுகிய வட்டத்தில் இயங்கும் கட்சி இல்லை. அதிமுகவிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணத்திற்கு வெறும் பேராசைதான் காரணம். வேறு இடங்களுக்குச் சென்றால் உடனே மந்திரி பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய அண்டாவில் அவர் அல்வா கிண்டி கொடுத்துவிட்டுப் போய்விட்டார்” என்று தெரிவித்தார்.
