- நா.மணி
(காமராஜர் பிறந்த நாள் கட்டுரை)
தன்னலமற்ற தலைமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நாளுக்கு நாள் காமராஜர் (Kamarajar) புகழ் மக்கள் நெஞ்சில் உயிரோவியமாக பதியம் இடப்பட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் இல்லையேல் எனக்கு கல்வி இல்லை என்று சாட்சி சொல்லும் ஐஏஎஸ் அதிகாரிகள் எத்தனை பேர்? அறிவியல் அறிஞர்கள் எத்தனை பேர்? அரசியல் தலைவர்கள் எத்தனை பேர்? அவ்வளவு ஏன்? இன்று பணக்காரர்கள் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை கூட காமராஜரின் அருமை பெருமைகளை தெரிந்து கொண்டிருக்கிறது.
ஒரு தலைவரின் பெருமை அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தினார்? என்பதல்ல. எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என்பதல்ல. தனக்கு கிடைத்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார், மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்தார் என்பதில்தான் உள்ளது.

இந்திய அரசியலில் அதிகாரத்தை எப்படி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் காமராஜர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாதவர். ஆனால் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராகவும், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் உயர்ந்தது ஒரு தனிநபரின் வெற்றிக்கதை மட்டுமல்ல. உழைப்பு, நேர்மை, தியாகம் மற்றும் மக்கள் நம்பிக்கையின் வரலாறு.
1919-ஆம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை இளம் காமராஜரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதே தன்னை நாட்டு விடுதலைக்காக ஒப்படைத்தார். பலமுறை சிறை சென்றார். சிறை அவருக்கு தண்டனைக்கூடமாக இல்லை. அது அறிவைப் பெருக்கிய பல்கலைக்கழகமாக மாறியது. புத்தகங்களை வாசித்தார், தேசியத் தலைவர்களுடன் உரையாடினார். நிர்வாகத் திறனை வளர்த்துக் கொண்டார்.

1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலம் மாநில வரலாற்றின் பொற்காலம். “ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி” என்ற நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டம். இலவசக் கல்வி, பள்ளிக் கட்டடங்கள், ஆசிரியர் நியமனங்கள் ஆகியவை கல்வியை மக்களின் உரிமையாக மாற்றினார். இன்று தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் காமராஜர்.
கல்வியுடன் தொழில்துறைக்கும் அவர் சம முக்கியத்துவம் கொடுத்தார். பெரிய தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் உற்பத்தி ஆகியவற்றில் அவர் எடுத்த முடிவுகள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நீண்டகால அடித்தளமாக அமைந்தன. வளர்ச்சி என்பது நகரங்களுக்கு மட்டுமே அல்ல; கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற பார்வை அவருடைய நிர்வாகத்தின் சிறப்பம்சமாக இருந்தது.

காமராஜரின் வாழ்க்கையில் மிகவும் வியப்பூட்டும் நிகழ்வு “காமராஜ் திட்டம்” தன்னைத் தானே முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள தானே தீட்டிய திட்டம். அதிகார ஆசை கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்தும் என்று உணர்ந்த அவர், தானாகவே பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்களும் பதவிகளை விட்டு விலகி மக்களிடையே பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்தார். உலக அரசியல் வரலாற்றிலேயே அதிகாரத்தை துறந்து அமைப்பை வலுப்படுத்த முயன்ற தலைவர்கள் மிகச் சிலரே; அவர்களில் காமராஜர் முக்கியமானவர்.

ஜவஹர்லால் நேரு மறைந்தபோது ஏற்பட்ட தேசியத் தலைமைக்கான நெருக்கடியை அமைதியாகக் கையாண்டவர் காமராஜர். லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்காற்றினார். அவருக்கே பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் அதை மறுத்தார். அதனால்தான் இந்திய அரசியல் அவரை “கிங் மேக்கர்” என்று அழைத்தது. ஆனால் அவர் தன்னை ஒருபோதும் “கிங்” ஆக மாற்றிக்கொள்ளவில்லை.

எளிமை அவரது அடையாளம். ஆடம்பரமில்லாத வாழ்க்கை, தனிப்பட்ட சொத்து சேர்க்காத நேர்மை, பொதுப் பணத்தில் சிறிதளவும் சுயநலமின்றி செயல்பட்ட ஒழுக்கம்—இவை அனைத்தும் அவரை மக்களின் மனதில் நிலையான இடம் பெறச் செய்தன. அரசியல் என்பது அதிகாரம் அல்ல; பொறுப்பு என்பதைக் காமராஜர் தனது வாழ்வால் நிரூபித்தார்.
இன்று ஜனநாயகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அரசியலில் பணமும், விளம்பரமும், தனிநபர் புகழும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சூழலில் காமராஜரின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: “தலைவர்கள் அதிகாரத்திற்காக வாழ வேண்டுமா? அல்லது மக்களுக்காக வாழ வேண்டுமா?”

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நேரத்தில், அவரை வெறும் சிலை, நினைவிடம் அல்லது பிறந்தநாள் விழாக்களால் மட்டுமே போற்றுவது போதாது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவரது நிர்வாகத் திறன், கல்விக் கொள்கை, தன்னலமற்ற தலைமை, எளிமையான வாழ்க்கை ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும். நல்லாட்சியை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு தலைமுறையும் காமராஜரை மீண்டும் வாசிக்க வேண்டும்.
தன்னலமற்ற தலைவர்கள் வரலாற்றில் அரிதாகப் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் மதிப்புகள் காலத்தை வென்று வாழ்கின்றன. அந்த அரிய வரிசையில், கர்மவீரர் காமராஜர் என்றும் ஒளிரும் ஒரு நிரந்தர நட்சத்திரம்.
காமராஜர் உருவாக்கிய பொதுக் கல்வி முறைமை, அருகமைப் பள்ளி முறைமை காலாவதி ஆகிவிட்டது. எண்ணற்ற பள்ளி வகைமைகள் உருவாகி வளர்ந்து வருகிறது. எத்தனை விதமான கல்வி முறைகள், எத்தனை விதமான பள்ளிகள் உருவாகி வளர்கிறதோ அத்தனை விதமான வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் தோன்றி வளரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அன்றும் இன்றும் காமராஜர் உருவாக்கிய அருகமைப் பள்ளி பொதுப் பள்ளி முறையையே சரியான அணுகுமுறை என்பதை பல வளர்ந்த நாடுகள் சாட்சி சொல்கிறது.
கல்வியை சந்தை சக்திகளிடம் விடக்கூடாது என்பதை அந்தக்காலத்திலேயே சிந்தையில் கொண்டிருந்தார் காமராஜர். நெருக்கடிகள் முற்றி முற்றி வலுவாகி அதற்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டும் என்ற நெருக்கடி உருவாகும் போது காமராஜரின் தேவை மேலும் தேவையாக இருக்கும்.
