ஆளுநர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது. இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட விவகாரமும், பட்டம் வழங்குவதில் எழுந்த குளறுபடிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டன. மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாக மட்டுமே பாடப்பட்டது.

ADVERTISEMENT

மாநிலப் பாடலுக்கு முதல் முன்னுரிமை தராமல், 3-வது இடத்திற்குத் தள்ளியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

மாணவர்கள் கொந்தளிப்பு:

இதனிடையே, விழாவில் பட்டம் பெறவிருந்த 871 பேரில், வெறும் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

“முனைவர் பட்டம் பெறக்கூடிய அனைவருக்கும் ஆளுநரின் கையாலேயே பட்டம் வழங்குவதே வழக்கமான நடைமுறை. அந்த மரபை மாற்றாமல் அனைவருக்கும் ஆளுநரே பட்டம் வழங்க வேண்டும்” எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த முறை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த நிகழ்வைக் கருத்தில் கொண்டே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

நிர்வாகம் பணிந்தது:

மாணவர்களின் எதிர்ப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநரே பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான், “முனைவர் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் ஆளுநரே தனது கையால் பட்டம் வழங்குவார்” என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, பட்டமளிப்பு விழா தொடர்ந்து நடைபெற்றது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share