தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தவெக ஐடி விங் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம். இவ்வாறு தவெக ஐடிவிங் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
