கருங்கல், ஜல்லிகற்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கருங்கல், ஜல்லிகற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவற்றை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தற்காலிகமாக தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று கேரள முதல்வர் சதீசன் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு அரசுகளும் இணைந்து, நமது மக்களின் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கூட்டு கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சனை ஒன்றில் உங்களின் தனிப்பட்ட தலையீட்டைக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாடு அரசு ஜூலை 9ஆம் தேதியிட்ட அறிவிக்கை எண் 306 இன் படி, ஜல்லிகற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் கேரளாவுக்கு ஜல்லிகற்கள் கொண்டு வரப்படுவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பல நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஜல்லி கற்களை பெறுவதில் தமிழகமே முதன்மை மாநிலமாக விளங்குகிறது
கேரளாவில் பெரிய அளவிலான கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான ஜல்லிக் கற்களின் இருப்பு குறைவாகவே உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பெருமளவிலான ஜல்லி கற்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகிறது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விநியோக சங்கிலியை பாதித்து, கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதத்தை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்ல தென்னகப் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கவும், பொருளாதார மையங்களுக்கான அணுகலை எளிதாக்கவும் உதவும்.
விழிஞ்சம் சர்வதேச கடல்சார் துறைமுகம் மற்றும் வல்லார்பாடம் சர்வதேச சரக்குக் கொள்கலன் முனையம் ஆகியவற்றுக்குத் தடையற்ற இணைப்பு வசதியை வழங்கி, தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்.
உங்கள் அரசின் கொள்கைக்குப் பின்னணியில் உள்ள நோக்கங்களையும், இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் முழுமையாக உணர்கிறேன்.
ஆனால், கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டும் தேவைப்படும் ஜல்லிக் கற்களைத் தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாகப் பொருத்தமான தளர்வுகளை வழங்க வேண்டும்.
இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகாண உங்கள் அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
