நகராட்சி நிர்வாகத் துறையின் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெற முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதங்களை அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
எனினும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையும், முன்னாள் அமைச்சர் நேரு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த சூழலில் கடந்த ஜூன் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் முன்பு ஆஜராகி ஒரு முறையீடு செய்தார். நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இதை விசாரித்து நீதிபதிகள், ’நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையிலும், எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்’ என்று கேள்வி எழுப்பினர்.
அதேசமயம் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மற்றும் பிறருக்கு எதிராக ஜூன் 23ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த சூழலில் வழக்கு இன்று (ஜூன் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என் நேரு பதவி வகித்த காலத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக திமுக ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு தற்போது தமிழ்நாடு அரசு ஒரு மனுத் (மெமோ) தாக்கல் செய்துள்ளது’ என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.என் நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ‘அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது’ என்று வாதத்தை முன் வைத்தார்.
மேலும், ‘ஆட்சி மாறியதால் உள்நோக்கத்துடன் ஆதாரம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆட்சி மாறினாலும் நடந்து முடிந்த விசாரணையை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அரசின் மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது’ என்றும் நேரு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதுபோன்று பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர்களான என்.ரவிச்சந்திரன், கே.என் மணிவண்ணன் உள்ளிட்டோர் சார்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ’பிரதான வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த உத்தரவைக் கண்டிப்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, கே,என் நேரு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற அனுமதி கேட்கும் தற்போதைய அரசின் மனு மீதான விசாரணையையும் ஜூலை 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
