முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தரும் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று ஜூலை 28-ந் தேதி நடைபெற்றது. பழைய நாடாளுமன்றத்தில் அறை எண் 62-ல் இந்த கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.

இந்தக் கூட்டத்தில்
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. வைத்திலிங்கம்
- சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம்
- சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்
- விசிக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார்
- முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கார்த்தி ப. சிதம்பரம், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில், சுதா, விஜய் வசந்த், கிறிஸ்டோபர் திலக் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, ஒருங்கிணைந்த குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவது குறித்தும், வருங்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

காவிரி நீர் உரிமை, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை மற்றும் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து, அடுத்தகட்ட செயல்திட்டங்களை வகுத்துள்ளோம்.

இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழ்நாட்டு மக்களின் நலன், மற்றும் மாநிலத்தின் குரல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலிமையாக ஒலிக்க, இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும்.
ஒன்றுபட்ட குரல். உறுதியான செயல். தமிழ்நாட்டின் நலனே எங்கள் முன்னுரிமை. இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
