மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நேற்று ஜூலை 28-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு பெரிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. பொறியியல் படிப்பைப் படிக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு தங்கள் வாழ்க்கைப் பாதையை எப்படி அமைத்துக்கொள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
இன்றைய தலைமுறையினருக்குச் சரியான வழிகாட்டுதல் மிகவும் அவசியமானது. மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்திலிருந்தே எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான சிந்தனையையும், அதற்கான சரியான வழிகாட்டுதலையும் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் பொறியியல் மீதான மோகம் அதிகரித்து, ஏராளமானோர் பொறியியல் படித்தார்கள். ஆனால், 5 ஆண்டுகள் படித்து முடித்த பிறகு, அந்தப் படிப்பிற்கான தகுதியான வேலைவாய்ப்பும், மதிப்பும் கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால், தான் படித்த படிப்பிற்குச் சம்பந்தமில்லாத வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் படித்தவர்களுக்குத் தங்கள் துறை சார்ந்த வேலைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதேபோல, கணினி அறிவியல், பி.இ. தகவல் தொழில்நுட்பம் (BE IT), பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT) படித்தவர்களுக்கு இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன.
எனவே, சரியான வழிகாட்டுதல், மாணவர்களுக்கு மட்டுமன்றிப் பெற்றோர்களுக்கும் தேவைப்படுகிறது. ஏனெனில், சமூகத்தில் மற்றவர்கள் எதைச் செய்கிறார்களோ, அதைப் பார்த்துத் தாங்களும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் இன்றைய தலைமுறையினரிடையே பெரும் தடுமாற்றம் நிலவுகிறது.
இன்றைய இளைஞர்களிடம் தற்காலிக வேலைகள் மீதான மோகம் அதிகரிப்பதற்குக் காரணமும், தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சரியாகத் திட்டமிட முடியாததே. இதன் விளைவாகவே, அவர்கள் ஸ்விகி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற தற்காலிக வேலைகளில் இணைந்து, தங்களின் உண்மையான துறை சார்ந்த தொழிலுக்குள் நுழைய முடியாமல் போகிறார்கள்.
அனைத்துத் தொழில்களும் உயர்வான தொழில்களே.. கணக்குத் தணிக்கையாளர் (Auditor), வழக்கறிஞர், மருத்துவர் என அனைத்துத் துறைகளிலும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தங்களின் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொண்டால், நிச்சயம் மிகப்பெரிய நிலையை அடைய முடியும்.
மாணவர்கள் தங்கள் நண்பர்கள், இணையதளம், கூகுள் மற்றும் யூடியூப் போன்றவற்றைப் பார்த்துத் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். பெற்றோர்களும் சுற்றியுள்ளவர்களைப் பார்த்தே முடிவெடுக்கிறார்கள். எனவே, அடுத்த தலைமுறையினரை நல்வழிப்படுத்தவும், காப்பாற்றவும் சரியான வழிகாட்டுதல் திட்டங்கள் அவசியம்.
தற்காலிக வேலைகள் என்பவை ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களோ இருக்கலாம்; ஆனால், இளைஞர்கள் பல ஆண்டுகள் அதிலேயே முடங்கிக் கிடப்பது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமன்றி, துறை சார்ந்த வல்லுநர்களின் பொறுப்பும் கூட.
கார்பெண்டர் மற்றும் பிளம்பர் போன்ற தொழில்களுக்கும் அதிகத் தேவை உள்ளது. இன்று ஒரு கார்பெண்டரை அழைக்க வேண்டுமென்றால், ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதை யாரும் ஒரு தொழிலாகக் கருதுவதில்லை. எந்தவொரு துறையையும் தேர்ந்தெடுத்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து உழைத்தால், அதில் உச்சத்தைத் தொட முடியும்.
ஒரு மாணவி 4 ஆண்டுகளாக நீட் NEET தேர்விற்காக முயன்று கொண்டிருந்தார். 4-வது ஆண்டிலும் ‘கிடைக்குமா, கிடைக்காதா’ என்ற சந்தேகத்துடனேயே இருந்தார்.
நல்ல மதிப்பெண் பெற்றிருந்த அந்த மாணவியிடம், “உன்னிடம் நன்றாக படிக்கும் திறன் உள்ளது; எனவே நீ வழக்கறிஞருக்கான படிப்பைத் தேர்ந்தெடு. சட்டத் துறையில் உன்னால் சிறப்பாகச் செயல்பட முடியும். மருத்துவத்தை விட இது உனக்குச் சிறந்த வாழ்க்கையைத் தரும்” என்று கூறினேன்.
நாம் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் உழைக்கிறோமோ, அதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும். எலக்ட்ரீசியன், கார்பெண்டர் என அனைத்துத் தொழில்களும் சிறந்தவையே.
இன்று 3 முதல் 4 லட்சம் பேர் பொறியியல் படித்துவிட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பொறியாளராகவே பணியாற்றுகிறார்களா? சிவில் முடித்தவர் ஐடி நிறுவனத்திலும், மெக்கானிக்கல் முடித்தவர் மென்பொருள் துறையிலும், பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்தவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையிலும் வேலை பார்க்கிறார்கள். இவை படிப்பிற்கும் வேலைக்கும் தொடர்பில்லாத நிலையைக் காட்டுகின்றன.
எந்தவொரு துறையிலும் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆடிட்டரை உடனடியாக சந்திக்க முடியாது; அவ்வளவு தேவையும் மரியாதையும் அவர்களுக்கு இருக்கும். நமது பகுதியிலேயே அனைத்து வாய்ப்புகளும் தேவைகளும் உள்ளன; ஆனால், நாம் தான் தவறான தேர்வுகளைச் செய்துவிட்டுச் சிரமப்படுகிறோம்.
சமீபத்தில் ஒரு இளைஞர் என்னை வந்து சந்தித்தார். அவர் வடமாநிலத்தில் உள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக தற்காலிக வேலையில் இருந்துள்ளார். இவ்வளவு காலம் உழைத்தும் தன்னைப் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார்.
நான் அந்த இளைஞரிடம், “8 ஆண்டுகள் பட்ட கஷ்டம் போதும். உனக்கு விருப்பமான ஒரு தொழிலை உனது சொந்த ஊரிலேயே தேர்ந்தெடு. எலக்ட்ரீஷியன், கார்பெண்டர் அல்லது ஏசி மெக்கானிக் என ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு 5 ஆண்டுகள் உழைத்தால், 6-வது ஆண்டில் நீ நினைத்ததை விட அதிகமாகச் சம்பாதித்து உன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்” என்று கூறி, ஒரு எலக்ட்ரீஷியனிடம் பயிற்சி பெற ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
எனவே, அனைவருக்கும் சரியான தொழில் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். சமூகத்தைப் புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். மற்றவர்களைப் பார்த்து நாமும் சென்றால், இறுதியில் நமக்கே கஷ்டம் வரும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.
