கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டு யானை ஒன்று மீண்டும் அதே கேட் வழியில் வெளியே வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அது மட்டும் இன்றி தோட்டங்களிலும் தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கால்நடை தீவனங்களையும் தின்று செல்கிறது. அப்போது எதிரே வரும் மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த சில தினங்களாக பெரிய தடாகம், அனுவாவி சுப்ரமணிய கோவில் சுற்று பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்து வருவதால் பக்தர்களும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெரிய தடாகம்- குட்டை வழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த ஒரு வீடு ஒன்றின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றது. மீண்டும் அதே கேட் வழியாக வெளியேறியது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
