அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி போடுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை உணவு திட்டம், காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
காலை உணவு திட்டத்தில்,4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும். 294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். காலை உணவு 150–200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும்” என்று டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது.
இந்தநிலையில் இன்று (ஜூலை 29) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வரிடம் பல கோரிக்கைகளை நான் முன்வைத்திருக்கிறேன். நம்முடைய அரசு பள்ளிக்கூட குழந்தைகளின் சீருடைகளை எப்படி மேம்படுத்தலாம், இந்த காலை உணவு மூலம் ஒரு மாணவனுக்கு ரூ.11.50 பைசாதான் கிடைக்கிறது. இன்றைக்கு ஒரு மேகி பாக்கெட்டே 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உப்புமா, கோதுமை உப்புமா, ரவை உப்புமா ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த உப்புமாவில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்.அதனால், உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் அறுசுவை நிறைந்தாவும் எப்படி மாற்றலாம்? என்று ஆலோசித்து வருகிறோம்.
நீதிக்கட்சி உணவு கொண்டு வந்தது, அதை, காமராஜர் ஆட்சி மதிய உணவு ஆக்கியது, கலைஞர் முட்டை கொண்டு வந்தார், புரட்சித்தலைவர் சத்துணவாய் மாற்றினார், இப்படி, பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அது மாதிரி எனக்கு ஒரு ஆசை இருந்தது. வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலாமே என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன். அது பல துறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் அதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறி இருக்கிறார்” என்றார்.
அந்தவகையில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் பிரியாணி கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வருகின்றன.
