இந்தியாவின் முன்னணி குழுமமான மார்ட்டின் சாம்ராஜ்யம் எப்படி உருவானது? மார்ட்டினின் தொடக்க காலம் எப்படியானதாக இருந்தது? என கோவை அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.

மார்ட்டின் குழுமங்களின் தலைவரான சாண்டியாகோ மார்ட்டின், வணிக உலகில் நுழைந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழாவும், மார்ட்டின் குழுமங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய 50 பணியாளர்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் விழாவும் கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்ட்டின் குழுமங்களின் தலைமையகத்தில் ஜூலை 25-ந் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம், இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், தனா இம்பெக்ஸ் உரிமையாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு மார்ட்டினை வாழ்த்தினர்.

இதில் கோவை அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசியதாவது:
இன்றைய விழாவினுடைய நாயகன், மார்டின் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார். அவருடைய மனைவி, அன்பான மனைவி இங்கே இருக்கிறார். அவருடைய மகன்கள், அவருடைய அதிர்ஷ்டமான பெண் இங்கே இருக்கிறார், சிந்து மருமகள் இங்கே இருக்கிறார். ஆனால், இந்த அவையிலே, எனக்கென்று ஒரு தனி சிறப்பு இருக்கிறது.
கிட்டத்தட்ட எனக்கு 45, 48 ஆண்டுகளாக மார்டின் அவர்களைத் தெரியும். சோ, இந்த அவையிலேயே நீண்ட காலம் அவரைப் பற்றி அறிந்த ஒரு நபர் நான்.
முதன் முதலில் விஸ்வாசம் தான் கோயம்புத்தூரில் புத்தகம் வாங்க வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும் என்று வந்தார்.
1966-ல் மார்டின் கோயம்புத்தூருக்கு வருகிறார். கோயம்புத்தூரிலே வந்து, எங்களுடைய நிறுவனம் காந்திபுரம் கவுரிசங்கருக்கு எதிர்புறம் இருந்தது. அன்று காந்திபுரத்திலே கமலா ஸ்டோர் இருந்தது. கவுரி சங்கர் இருந்தது. ராஜேஸ்வரி இட்லி கடை இருந்தது. அங்கே இட்லிக்கு 12 விதமான சட்னி கொடுப்பாங்க. லட்சுமி காம்ப்ளக்ஸ் பக்கத்தில் காய்கறி கடை. இதுதான் கிராஸ்கட் ரோடு. கிரிக்கெட் விளையாடலாம். அவ்வளவு காலியாக இருக்கும். அப்ப மார்டின் அங்கே கடை வைக்கிறார்.
அதற்குப் பிறகு எக்ஸ்டென்ஷன். நம்மளுடைய காந்திபுரம் கவுரிசங்கரில், மாணவர்கள் பரீட்சை எழுதுகிற அட்டையில கிளிப் போட்டு மேல பிடிச்சு, லைனா கீழ லாட்டரிகளை அடுத்தடுத்து அடுக்கணும். ஒரு கிளிப் எடுக்கும் போது ஏமாந்தா அந்த லாட்டரி கீழே விழுந்துவிடும். டெக்னிக்காக உருவி உருவி கொடுக்கணும். அதை எல்லாம் அந்த அட்டையில அற்புதமா வச்சிருப்பார்.

அதுக்கப்புறம் காந்திபுரத்துல மகாவீர்ஸ் வந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக காந்திபுரம் வளர்ந்தது. அவர் காந்திபுரத்தில்தான் குடியிருந்தாரு. இவருக்கு இருந்த அப்ப மிகப்பெரிய சொத்து ஒரு ஸ்கூட்டர். அந்த ஸ்கூட்டரில்தான் அந்த அம்மா, இந்த மூணு குழந்தைகள், எல்லாத்தையும் ஏத்திட்டு வருவாரு. அதிலேயேதான் அந்த லாட்டரி சீட்டும், அதிலேயே அந்த அட்டையெல்லாம் எடுத்துட்டு வருவாரு. இப்படித்தான் அவருடைய வாழ்க்கை தொடங்கியது.
1983-ல் விஸ்வாசம், லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆரம்பிக்கிறாங்க. அந்த படி பக்கத்தில, ”நான் பெட்டி கடை வைக்கிறேன்னு” சொல்லி, மார்டின் பெட்டிக் கடை வைக்கிறார்.
அப்பொழுது, நான் ஜெயராஜை, மார்டினை, விஸ்வாசத்தைப் பார்க்கிறேன். எல்லாத்தையும் பார்த்துட்டே இருக்கிறேன்.
அவருடைய காந்திபுரம் 5-ம் நம்பர் ஆபீஸ் ஒன்னு இருக்கு. படி ஏறி ஒரு சின்ன ஆபீஸ். அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, நான் ஞாபகப்படுத்துகிறேன்.
அப்பதான் முதல்-முதல் சம்பூர்ணா ஹோட்டல் காந்திபுரம், ரெண்டாம் நம்பர்ல ஆரம்பிச்சிருக்கு. நானு, மார்டின், பிரகாஷ்… மூணு பேரும் மதியம் அப்ப 40 ரூபாய் சாப்பிட்டுவிட்டு கவுரிசங்கருக்கு வரோம். கரெக்டா, எங்க அப்பா பெரியவர் வராரு, “மூணு பேரும் எங்க போயிட்டு வர்றீங்க?”ன்னு கேட்டாரு. நாங்க ரூ.40 கொடுத்து சாப்பிட்டு வந்தோம்னு சொன்னோம்.

அதுக்கு ”ரூ.40 கொடுத்து சாப்பிட்டு வந்தோம்னு சொல்றீங்களே…”ன்னு அப்பா கேட்கிறார். அதுக்கு மார்டின் அப்ப சொன்ன பதில், “சாப்பிடுறதுக்குத்தானே உழைக்கிறோம்” என்பதுதான்.
அதற்கு எங்க அப்பா சொன்னார், “குடும்பமே சாப்பிடணும் இல்லையாப்பா.. நீங்க மட்டும் சாப்பிட்டா போதாது அல்லவா?” என்றார்.
அன்னைக்கு, அந்த காலகட்டத்துடைய வளர்ச்சி ஒரு 40 ரூபாயே மிகப்பெரிய பணம்.
அவருடைய ஓயாத உழைப்பு.. மதுரையில அப்ப லாட்டரி சீட்டுல சேகர், மணியன்.. இவங்கதான் கொடி கட்டிப் பறக்கிறாங்க. அன்னைக்கு லாட்டரின்னா அவங்கதான். மதுரையை விட்டா வேற யாரும் செய்ய முடியாது. அப்ப கோலோச்சினவங்க..
அவங்ககிட்ட போய் லாட்டரி எடுத்துட்டு வந்து காந்திபுரத்தில் வச்சு விற்கிறதுதான் மார்டின் ஆரம்பிச்சது. அதுல கோபாலகிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். மறந்துட்டாரோ என்னவோ பெட்டிக்கடையில. அவர்தான் அந்த நியூஸ் பேப்பர் எடுத்து எடுத்து இங்க்ல மார்க் பண்ணி மார்க் பண்ணி பரிசு விழுந்ததெல்லாம் நோட் பண்ணி வைப்பாரு.

அப்ப இருந்து அவரைப் பார்க்கிறேன். அதுக்கப்புறம் அவரே இந்த லாட்டரியை நாமே ஏன் செய்யக்கூடாது? அப்படின்னு சொல்லி அந்த லாட்டரியை எடுத்து செய்ய ஆரம்பிக்கிறார்.
அதுல பார்த்தீங்கன்னா, சிக்கிம், வெஸ்ட் பெங்கால், மகாராஷ்டிரா, பஞ்சாப், நாகாலாந்து இந்த மாதிரி எல்லா ஊருடைய அரசாங்கத்துடைய அனுமதியை லீகலா வாங்கி, அதுக்கப்புறம் அந்த அனுமதியின் பெயரில் லாட்டரி சீட்டை பிரிண்ட் பண்ணி விற்க ஆரம்பிச்சவர்தான் இந்த மார்டினுடைய சாம்ராஜ்யம்.
இந்த சாம்ராஜ்யத்திற்கு பின்னால எவ்வளவு உழைப்பு இருக்கு, எவ்வளவு வியர்வை இருக்கு, எவ்வளவு கடுமையான பயணம் இருக்குன்னு எனக்கு இஞ்ச் பை இஞ்ச்சா தெரியும். ஏன்னா, தொடர்ந்து நான் அவரைப் பார்த்துகிட்டு இருக்கிறேன். அன்னைக்கு 45 வருஷத்துக்கு முன்னால் என்னை அண்ணான்னுதான் கூப்பிடுவாரு. நானும் அவரை அண்ணான்னுதான் கூப்பிடுவேன். இன்னைக்கும் அதே மாதிரி பார்த்தா அண்ணான்னுதான் கூப்பிடுறாரு. அவருக்கு என்ன வயசுன்னு எனக்கு தெரியல. எனக்கு என்ன வயசுன்னு அவருக்கும் தெரியல. இதேதான் தொடர்ந்து போயிட்டே இருக்குது எங்க வாழ்க்கை பயணம்.
ஆனா, அதுக்கப்புறம் இவ்வளவு ஊர்ல போய் லாட்டரி எல்லாம் ஆரம்பிச்சு, மிகப்பெரிய அளவுல இந்த லாட்டரி சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் வளர்த்தாங்க. உங்களுக்கு எவ்வளவு பேருக்குத் தெரியுமோ தெரியாதோ இந்தியாவிலேயே ஹையஸ்ட் இன்டிவிஜுவல் டாக்ஸ் பேயர் மார்டின்தான். அந்த பெருமை கோயம்புதூருக்குத்தான்.
அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் லீகலா ஒரு வியாபாரத்தை பண்றாரு. சட்டத்துக்கு புறம்பா பண்ணல. அந்த சட்டத்துக்கு உட்பட்டு வர வருமானத்துல ஒரு இன்கம் டாக்ஸும் கட்டுறாரு. இந்தியாவிலேயே ஹையஸ்ட் இன்டிவிஜுவல் டாக்ஸ் பேயரா அவர் இருக்கிறார். அப்படிப்பட்ட உச்ச வளர்ச்சியை அவர் எடுத்துட்டு போனார்.
அவருடைய மகன்கள்.. சார்லஸ்.. சார்லஸ் பார்த்தீங்கன்னா, சின்ன பையன்ல இருந்து நான் பாக்குறேன். அப்பப்போ எங்கயாவது துபாய் போறேன், அமெரிக்கா போறேன், லண்டன் போறேன்னு சொல்வார். திடீர்னு ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி வந்தது. அது எப்படி மாற்றம் வந்ததுன்னு எனக்குத் தெரியல.
அதுக்கப்புறம் பார்த்தா அவங்க அப்பா கூடயே உட்கார்ந்திட்டு இருப்பாரு. அதுக்கப்புறம் கரெக்டா சிந்துவை கல்யாணம் பண்ணி வச்சாங்க. நீ வந்த நேரமோ என்னமோ தெரியல, டோட்டல் மிகப்பெரிய தொழிலதிபர் ஆயிட்டாரு இப்போ. இப்ப எம்.எல்.ஏ.வும் ஆயிருக்காரு பாண்டிச்சேரியில. கூடிய சீக்கிரமா மந்திரியும் ஆயிடுவாரு. அதுல எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
அடுத்தது ஜோஸ் டைசன்… அவர் கொஞ்சம் அமைதியான ஆளு. அப்படியே ஜாலியா இருந்த ஆளு. திடீர்னு ரீடைல் மார்க்கெட்டிங்கு வந்து, சேரா குரூப்ன்னு ஆரம்பிச்சு, அவர் பார்த்தீங்கன்னா ஒரு வித்தியாசமான முயற்சியில ரீடைல் மார்க்கெட்டில் எடுத்துட்டு போகணும்னு செய்றாரு.
நான் கூட அவரைக் கேட்டேன், “ஏம்ப்பா உங்க அப்பாவுக்கு இவ்வளவு பெரிய எம்பையர் இருக்கே, போய் இந்த கல்கத்தாவுலயோ எங்கேயோ உட்கார்ந்து இந்தப் தொழில் பார்க்கலாம்”னு சொன்னேன்.
ஆனா டைசன், “இல்லை சார்… நான் சொந்தமா ஒரு எம்பையர் கிரியேட் பண்றேன், நான் ஒரு ரீடைல் மார்க்கெட்டை உருவாக்குறேன்” அப்படின்னு அவர் தனியா ஒரு லைன் எடுத்துப் பண்றாரு. பாராட்டுக்கள். அவரும் ரொம்ப நல்லா பண்றாரு.
அதுக்கப்புறம் நான் முக்கியமா சொல்ல வேண்டியது, நம்ம டெய்சி. டெய்சி பிறந்த நேரம்தான் இவருக்கு யோகமே வந்தது. மகாலட்சுமி வீட்டுக்கு வந்தது. அதுக்கப்புறம்தான் உங்க அப்பா கார் எல்லாம் வாங்க ஆரம்பிச்சது.
மார்டின் முதல் கார் வாங்குனப்போ நான் விட்னஸ். ஃபர்ஸ்ட் பி.எம்.டபிள்யூ. 740 வாங்குனப்போ நான் விட்னஸ். ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் கார் வாங்குனப்ப, ”இது எதுக்குடா இவ்வளவு பெரிய கார், கப்பலாட்டம்.. இதை ஸ்டார்ட் பண்ணவும் தெரியலை…” ன்னு சொன்னோம்.. உன்னோட யோகம்தான் அந்த வளர்ச்சி.
இன்னைக்கு இந்த குடும்பம் வந்து இந்த அளவுக்கு வந்திருக்காங்க. கிட்டத்தட்ட சி.எஸ்.ஆர் அதாவது நன்கொடையில் பல்வேறு விதமான நன்கொடைகள் இப்ப ஒரு கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா, ஒரு 135 கோடி ரூபாய்… 135 கோடீங்கிறது ஒரு சின்ன பணம் கிடையாது. மிகப்பெரிய சி.எஸ்.ஆர். அதாவது நன்கொடை.. ஒரு 135 கோடி அவங்க தான தர்மம் பண்ணி இருக்காங்க.
இதுக்கெல்லாம் பின்னாடி முக்கியமான ஒருவர் இருக்காங்க. அவங்கதான் லீமா ரோஸ்.
அவங்களைப் பார்த்தா சாதாரணமா சிரிச்சுட்டே இருக்குற மாதிரி இருக்கும். இந்த முழு குரூப்புடைய முதுகெலும்பும் அங்கதான் இருக்கு. அவங்க கரெக்டா ஒரு மாசத்துக்கு முன்பு எனக்கு போன் பண்றாங்க. ஒண்ணுமே சொல்லல. “அண்ணா 25-ந் தேதி ஒரு விழா இருக்கு, வந்துடணும்”னு போனை வச்சுட்டாங்க.
என்ன விழா? ஏது விழா? ஒன்னும் சொல்லல.
அந்த அம்மா சொல்றப்போ அவ்வளவு பிரியமா கண்டிப்பா வரணும். அதுல அந்த அம்மாவுடைய ஈடுபாடு, உங்க குடும்பத்தை அவங்க வச்சிருந்த விதம், அவங்க பப்ளிக்ல பழகுற விதம் நிறைய, அதெல்லாம் மார்டினுக்கு பின்பலமே அவங்கதான். உங்களோட குட்வில். பப்ளிக் ரிலேஷன் ஆபீசர்ன்னா நீங்க அவங்களை போடணும் மார்டின் குரூப்புக்கு. பொருத்தமான ஒரு அதிகாரி. அவங்களும் இப்ப எம்.எல்.ஏ.வா இருக்காங்க. கூடிய சீக்கிரம் நீங்களும் அமைச்சராகிடுவீங்க..
மார்டின் எப்போதுமே விமானத்தில் பயணம் செய்தாலும், கடைசி வரிசையில்தான் அமர்வார். அவர் ஒரு நாளும் முதல் வரிசை உள்ளிட்ட மற்ற இருக்கைகளில் அமரமாட்டார். அது அவருக்கு ஒரு பெரிய பொருட்டல்ல; அவர் நினைத்தால் சொந்தமாக விமானமே வாங்கக்கூடிய வசதி படைத்தவர்.
ஆனாலும், தான் பழகிய எளிய முறையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புவார். பலமுறை விமான நிலையத்திற்கு வரும்போது, ஆடம்பரமான காரில் வந்து உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வருவதற்குப் பதிலாக, சாதாரண டாக்சியில்தான் இந்த அலுவலகத்திற்கு வருவார். அந்தளவிற்கு மிகவும் எளிமையான ஒரு மனிதர். ஏதோ இன்றைய நிகழ்விற்காகக் கட்டாயப்படுத்தி இந்த உடைகளை அணியச் செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் எதைச் செய்தாலும் அது மிகச் சிறப்பாகச் செய்யப்படும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோயம்புத்தூர் 10-வது இடத்தில் உள்ளது. நாம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். லாட்டரித் துறையிலும், அதிக வரி செலுத்துவதிலும், சமூக நல உதவிகளிலும் முதலிடத்தில் உள்ளது. அத்தகைய பெருமைமிக்க கோவையில் நீங்களும் ஒருவராக இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கிறது.
கோயம்புத்தூருக்குக் கிடைத்த பெருமை என்னவென்றால், உங்களுக்கு ஏன் நான் கோவை சார்பாக நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றால், உண்மையைச் சொல்லப்போனால், பல தொழிலதிபர்கள் தாங்கள் பொதுப் பங்கீடு செய்யும்போது உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். நீங்கள் எதையும் யோசிக்காமல் நூறு கோடி, இருநூறு கோடி ரூபாய் வரை உதவிகளைச் செய்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அந்த நிறுவனங்கள் இன்று இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்துள்ளன.
கோவையில் உள்ள பல நிறுவனங்களை நீங்கள் கை கொடுத்து உயர்த்தியுள்ளீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு இந்நேரத்தில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். எத்தனையோ பேர் தாங்கள் தொடங்கிய தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்து, வங்கி மூலமாகப் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, பணம் கட்ட முடியாமல் தவிக்கும்போது, உடனடியாக திருப்பதி பெருமாளை நாடுவதைப் போல நேராக உங்கள் அலுவலகத்திற்குத்தான் வருவார்கள். அங்கு வந்து தங்கள் கடன் பிரச்சனைகளைக் கூறியவுடன், அதற்குரிய தீர்வை வழங்கி, நிதி உதவி அளித்து, அவர்களின் சொத்துக்களை மீட்டு அவர்களைத் தொழிலில் கைதூக்கி விடுகிறீர்கள். இது பாராட்டுக்குரிய ஒரு மாபெரும் செயலாகும். கோயம்புத்தூர் தொழில் துறைக்கு நீங்கள் ஒரு ‘ரிசர்வ் வங்கி’ போன்றவர்.
உண்மையைச் சொல்லப்போனால், எனக்கும் உங்களுக்கும் எந்தவிதமான நேரடி வரவு செலவு தொடர்பும் கிடையாது. நான் உங்களிடம் ஒரு பைசா வாங்கியதுமில்லை, நீங்களும் எனக்குக் கொடுத்ததுமில்லை. எனவே, உங்களைப் பாராட்டுவதற்காக நான் இதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை, முற்றிலும் உண்மையை மட்டுமே பேசுகிறேன்.
அதேபோன்று, ஜெயராஜ், பிரகாஷ் போன்றோரின் சேவைகளை எங்களால் மறக்க முடியாது. இவ்வளவு ஆண்டுகளாக அவர்கள் உங்களுடன் அப்படியே பயணித்து வருகிறார்கள்.
லட்சுமி காம்ப்ளக்ஸில் எங்கு கடை வைக்கப்பட்டதோ, அந்த வளாகத்திற்கே நிர்வாக அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார். அவரது புத்திசாலித்தனம் என்னவென்றால், நிறுவன நலனில் எப்போதுமே மிகுந்த விசுவாசத்துடன் செயலாற்றுவார். அந்த வளாகத்தில் துரும்புகூட அசைக்க முடியாத அளவிற்குப் பாதுகாக்கும் அத்தகைய விசுவாசமிக்க உழைப்பாளிகளை நாங்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டோம்.
52 ஆண்டுகளாக உங்கள் தொழிலாளர்கள் உங்களுடனே பயணித்து வருகிறார்கள். 25 ஆண்டுகள் தொடர்ந்து ஒருவருடன் இணைந்து வேலை செய்வது என்பது சாதாரணமான காரியமல்ல. அதற்கு வெறும் நாணயமும் நம்பிக்கையும் மட்டும் போதாது; உங்களிடம் அவர்கள் வைத்துள்ள விசுவாசமும் பக்தியும்தான் காரணம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக, 50 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் உழைப்பது என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் தான் இன்று சபையின் பின்னால் அமர்ந்துள்ளனர். மார்டின் குழுமத்தின் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் முழு வியர்வையும் சிந்தி உழைத்தவர்கள் அவர்கள்தான். அவர்களை நீங்கள் உரிய முறையில் அங்கீகரிக்க இருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும். அதற்காகவும் எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது கோயம்புத்தூரின் ஒரு குடிமகனாக உங்களிடம் மூன்று கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். ராஜராஜ சோழன் கடல் கடந்து மலேசியா, இலங்கை, ஆசிய நாடுகள் மற்றும் சீனா வரை சென்று பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவர் வரலாற்றில் நிலைத்து நிற்பது அவர் கட்டிய தஞ்சாவூர் கோயிலால்தான். அதுபோல, மார்டின் குடும்பம் கோவையில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் (University), சிறந்த கல்லூரிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசையாகும். அதற்குரிய அறிஞர்களும் நிபுணர்களும் நம்மிடையே உள்ளனர்; அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இதனைச் செயல்படுத்தலாம்.
தற்போது மார்டின் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் பரவலாக நிலங்களை வாங்கி நில வங்கிகளாக (Land Bank) வைத்துள்ளனர். அந்த நிலங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம்? உங்களைத் தவிர வேறு யாரும் அதனை அடையாளம் காண முடியாது. நிலத்தின் மதிப்பு உயர்ந்தாலும் கூட, அதற்குள் நமது வாழ்நாளின் காலம் முடிந்துவிடும். எனவே, கோவையில் எல்.என்.டி. (L&T) சாலையில் உள்ள இடங்களை முழுமையாகப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த பல்கலைக்கழகங்களையும் மருத்துவக் கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, எந்தத் தேர்தலாக இருந்தாலும் உங்கள் நிதியுதவி இல்லாமல் நடத்த முடியாது என்பதுதான் கோவையின் பலம். அந்தப் பலத்தை உணர்ந்து கோவையில் இதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சார்லஸ், ஜோஸ், டெய்சி ஆகிய மூன்று பேருக்கும் இந்த மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உங்கள் தந்தையின் பெயர் 10,000 ஆண்டுகள் நிலைக்க வேண்டும் என்றால் இவற்றை உடனடியாக உருவாக்க வேண்டும். உங்களிடம் இடமும் பணமும் உள்ளது; அதனைச் செயல்படுத்த உங்களோடு உழைக்க ஆட்கள் தயாராக உள்ளனர். இதனை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசினார்.
