திமுக ஆட்சியில் வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட சர்வதேச மையம் (Vallalar Centre Project) அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பாக 71 ஏக்கர் பரப்பிலான பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திமுக ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்துக்காக பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் இந்த திட்டத்துக்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகளும் தொடரப்பட்டன. இவ்வழக்கில், வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மைய கட்டுமானங்களுக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்குகள் இன்று ஜூலை 30-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரணிதரன், வள்ளலார் பெருவெளியில் ரூ100 கோடி மதிப்பிலான சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது என தெரிவித்தார். அத்துடன் சத்தியஞான சபை வசம் உள்ள 71 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க சுற்றுச் சுவர் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள், கட்டுமான பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகளை மூடுவதுடன் உடனடியாக சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகளை தொடங்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாமகவுக்கு வெற்றி – அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசின் இந்த முடிவை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், வள்ளலாரின் நோக்கங்களுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்த போது தான் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மக்கள் உரிமை பயணத்தின் போதும் அங்கு சென்று வழிபட்டு வந்தேன்.
ஆனால், முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்கு தான் வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தது. அதற்கு எதிராக போராடிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்ற போது அதற்கு அனுமதி கூட கொடுக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.
ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிறந்த முடிவு.
பெருவெளியியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.
எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
