அ. குமரேசன்
இப்படித்தான் அடிக்கடி நடக்கிறதே என்று பலரும் கடந்திருக்கக்கூடிய, ஒரு செய்தி…
கத்தியைக் காட்டி வழிப்பறிகளில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பிடிபட்டது. அதில் இரண்டு பேர் பட்டதாரி இளைஞர்கள். விசாரணையில், படித்திருந்தும் வேலை கிடைக்காத வெறுப்புதான் அந்தக் கும்பலோடு சேர வைத்தது என்று தெரிவித்தார்கள். பலரது நிலைமை இப்படி இருப்பதை மறுப்பதற்கில்லை.
உலக அளவில் வேலையின்மை சராசரி 4.9 சதவீதம்தான் என்று ஒரு தரவு சொல்கிறது. இது மேலோட்டமான எண்ணிக்கையேயாகும். முதலாளிய நாடுகளின் அரசாங்கங்கள் அளிக்கும் “எடிட் செய்யப்பட்ட” அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்டதேயாகும்.
நடப்பு வாழ்க்கையில் வேலை கிடைக்காதோரில் லட்சக் கணக்கானவர்கள் அதற்கான தீவிர தேடுதலைக் கைவிட்டுவிடுகிறார்கள். ஆண்டுக் கணக்காக அலைந்தும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத மனச்சோர்வில் விழுந்து விண்ணப்பிப்பதையே நிறுத்திக்கொள்கிறார்கள்.
அரசாங்கங்களின் 18 கோடியே 60 லட்சம் என்ற மாயப் புள்ளிவிவர விளையாட்டுக்கு மாற்றாக, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) இவர்களையும் ஆய்வில் சேர்த்து ஒரு புதிய கணக்கீட்டு முறையைச் செயல்படுத்தியது. அதன் அடிப்படையில் வேலை கிடைக்காதோரின் உண்மை எண்ணிக்கை 40 கோடியே 80 லட்சம் ஆகும்.
ஆம், முதலாளிய அரசுகள் நிறைவான வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதோடு, வேலை கிடைக்காத உண்மை மக்கள் தொகையையும் உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கவும் முயல்கின்றன. உலக அளவில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை 12.4 சதவீதம் என்ற மோசமான நிலையில் உள்ளது (“உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் –2026”, ஐஎல்ஓ அறிக்கை).
உள்நாட்டு நிலவரம்

இந்தியாவில் ஒன்றிய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) ஆவணத்திலும், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் உள்ள தரவுகளின்படி, நாட்டின் தற்போதைய வேலையின்மை விகிதம் 5.1 சதவீதத்துக்கும் 5.5 சதவீதத்துக்கும் இடையே அலைமோதுகிறது.
உழைக்கும் வயதில் வேலை கிடைக்காமல் குடும்பத்திலும் சமூகத்திலும் அவமதிப்புகளை எதிர்கொள்வோர் எண்ணிக்கை தோராயமாக 3.5 கோடி முதல் 4 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவை மையமாகக் கொண்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் “இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை (2026)” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளிடையே வேலையின்மை சுமார் 40 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபாயகரமான எல்லை என்று சமூகவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். “படித்தால் வேலை கிடைக்கும்” என்பது கனவுலகக் கதை நம்பிக்கையாகிவிட்டது.
படிக்காதவர்கள் அல்லது குறைந்த அளவே படித்தவர்களில் பெரும்பாலோர் வேறு வழியற்றவர்களாக சாலைப் பணி, கட்டுமானத் தொழில், வேறு மாநிலங்களில் உணவக ஊழியம், ஆபத்தான வேதிப்பொருள் ஆலைகள் என்று கிடைக்கிற வேலைக்கு, கிடைக்கிற கூலிக்குச் சென்றுவிடுகிறார்கள். பட்டம் பெற்றவர்களுக்கோ வேலை கிடைப்பது ஆன்லைன் விளம்பரங்களில் வரும் உணவுகள் போல் மாறியிருக்கிறது. நேரில் பார்க்கிற உணர்வைத் தந்து பசியைத் தூண்டும் அந்தச் சித்தரிப்புகளால் பசியாற்ற முடியாது அல்லவா?
விபரீத விளைவுகள்

வேலையின்மை நிலவரம் வெறும் புள்ளிவிவரம் அல்ல; அது தனிமனித வாழ்வைச் சிதைக்கிற, சமூக முன்னேற்றத்தை முடக்குகிற நோயின் சோதனையறிக்கை.
வேலையும் அதன் அடிப்படையிலான சமூக அங்கீகாரமும் மறுக்கப்படுவது, குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் கடுமையான சோர்வை ஏற்றுகிறது. ஏமாற்றத்தைப் பதற்றமாக மாற்றுகிறது. சொந்தக் குடும்பத்திலேயே கூட, ஏதேனும் வாக்குவாதம் ஏற்படுகையில், “நீ வெட்டி ஆளுதானே,” என்று கடுஞ் சொற்களால் கூரிய கற்கள் எறியப்படுவது வரையில் போகிறது. அதனால் காயம்படுகிறவர்கள் குடும்பப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துகளைக் கூற முடியாதவர்களாகத் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.
இது குடும்ப வன்முறைகளுக்கும் உறவு முறிவுகளுக்கும் வழிவகுப்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பலர் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களாகத் தற்கொலையையோ, தற்கொலைக்கு நிகரான வேறு முடிவுகளையோ நாடுகின்றனர். உயிரியல் படித்தவர் கடையில் கணக்கெழுதுவது போன்ற பொருந்தா வேலைகளில் சேரும் வேடிக்கைகளும் அரங்கேறுகின்றன.
உழைக்கத் தயாராக இருக்கும் கைகளுக்கு வேலை தராதபோது அந்தக் கைகள் சமூகக் குற்றங்களைச் செய்யத் துணிகின்றன. வேலையற்ற இளைஞர்களின் கொதி மனங்களை ஆளும் வர்க்கங்கள், தமது ஏவல் அமைப்புகளான சாதி–மதவெறி சக்திகளின் மூலம், எளிதாகக் கைப்பற்றுகின்றன. “உனக்கு வேலையும் நல்வாழ்வும் கிடைக்காதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைத்ததுதான்,” என்று ஓதப்படுகிறது. அது வரையில் உற்றவர்கள் எனக் கூடவே வந்தவர்கள் இப்போதிருந்து “மற்றவர்கள்” என்றாக்கப்படுகிறார்கள். பகையும் பழியுணர்வும் நெருப்புக் கங்குகளாக விசிறிவிடப்படுகின்றன.
வேலையின்மையால் ஏற்படும் வறட்சி, வாரிசுகளின் ஊட்டச்சத்தைத் தட்டிப் பறிக்கிறது. கல்விக் கதவை மூடுகிறது. வறுமையைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் நச்சுச் சுழற்சியை உருவாக்குகிறது. மிக முக்கியமான விபரீதமாக நாடு இந்த இளைஞர்களின் உழைப்பாலும் பங்களிப்பாலும் விளையக்கூடிய ஆக்கங்களை இழக்கிறது.
காரணம் யாதெனில்
வேலையின்மைக்குக் காரணம், படித்தவர்கள் தங்கள் தகுதிக்குக் குறைந்த வேலைகளுக்குச் செல்ல மறுப்பதுதான் என்ற மொக்கை விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதியையும் வேலைத்திறனையும் மேம்படுத்திக்கொள்வதில்லை என்பது மற்றொரு மொக்கை.
காலங்காலமாக நம்ப வைக்கப்படும் மற்றொரு வாதம், மக்கள்தொகை அதிகரிப்பதால் எல்லோருக்கும் வேலையளிக்க முடியாமல் போகிறது என்ற நழுவலாகும். உடனடிக் காட்சியில் அது நம்பத் தகுந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் எத்தனை கோடிக்கு மக்கள் தொகை அதிகமாக இருக்குமோ, அத்தனை கோடி நுகர்பொருட்களுக்குத் தேவை ஏற்படும், அதனால் உற்பத்தி விரிவடையும், அதனால் வேலைகள் அதிகரிக்கும். இந்த எளிமையான நியாயம் ஏனோ இப்படிப்பட்ட வாதர்களுக்குப் புரிவதில்லை.
உண்மைக் காரணங்களை அரசுகள் மக்களுக்குச் சொல்வதில்லை. மாறாக, மூடி மறைக்கிற திருக்காரியத்தில் இறங்குகின்றன. உதாரணமாக– முதலாளியப் பொருளாதாரத்தில் உலகளாவிய நெருக்கடி 2008இல் வெடித்தது. இந்தியாவில் இதன் தாக்கம் மன்மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ -2 ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வெளிப்பட்டது. 2011-12இல் அந்த அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடீபி) விகிதத்தைக் கணக்கிடுவதில், பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும் ஒரு புதிய முறையைக் கொண்டுவந்தது.

நாட்டு மக்களின் சராசரி ஊட்டச்சத்து வாய்ப்பில் ஏற்பட்ட வறுமை 2011-12 காலகட்டத்தை விட, நரேந்திர மோடி தலைமையிலான தேஜகூ அரசின் முதல் சுற்றில் 2017-18இல் மிகக் கொடூரமாக அதிகரித்தது. கிராமப்புற மக்களுக்குத் தேவைப்படும் சராசரி ஊட்ட அளவு நாளொன்றுக்கு 2,200 கலோரி என்று மதிப்பிடப்பட்டிருந்தது. 2017-18ஆம் ஆண்டின் என்எஸ்எஸ் கணக்கெடுப்பின்படி, கிராமப்புற இந்தியாவின் தனி மனித நுகர்வுச் செலவு 9 சதவீதம் சரிவடைந்தது. அதாவது, கிராம மக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு அந்த 2,200 கலோரி சத்துக்கான உணவும் கிடைக்கவில்லை.
இந்த அவல நிலைமை வெளியே தெரிந்துவிடாமலிருக்க மோடி அரசு அந்தத் தரவுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. கணக்கெடுப்பு முறையையே மாற்றியது. அதாவது முந்தைய ஆட்சியின் மிகைப்படுத்தப்பட்ட கணக்கைத் திருத்தவில்லை, மாறாக பாதிப்பைக் குறைத்துக் காட்டியது.
இதற்கு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக் காட்டினார்கள். அதுவொரு முக்கியமான காரணம்தான், ஆனால் அதற்கு இணையான உள்நாட்டுக் காரணங்களும் இருந்தன. சிறு உற்பத்தியாளர்களை முடக்கிப்போட்ட உள்நாட்டுப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி கொள்கையும்தான் அந்தக் காரணங்கள்.
அருவருப்பான குப்பைகளைப் பளபளப்பான தரைவிரிப்புக்கு அடியில் தள்ளிவிட்டு அதன் மேல் நிற்கவைப்பது போல, இந்த நிலவரங்களை மறைத்து “வளர்ச்சி” என்ற மோகமந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஒலிபரப்பினார்கள். இன்றும் ஒலிபரப்புகிறார்கள்.
“வெறும் ஜிடீபி வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதாலேயே வேலைவாய்ப்புகள் உருவாகிவிடும் என்ற மாயையை அரசு கைவிட வேண்டும். ஏனெனில், தாராளமயப் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் உற்பத்தியின் அளவு கூடினாலும், மனித உழைப்புக்கான தேவை குறைந்து வேலையில்லா வளர்ச்சி மட்டுமே ஏற்படுகிறது,” என்று பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக். (‘சோசலிசமும் இந்திய அரசமைப்பு சாசனமும்’, ஸ்பீக்கிங் டைகர் பதிப்பகம், 2026).
இந்தியாவில் பகுதிநேர வேலை, சுயதொழில் போன்ற காரணங்களால் வேலையின்மையைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினம். ஆனாலும், இந்தியாவின் வேலையின்மை 2019இல் முந்தைய 45 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டது. ஆனால், பெண்களின் ஊதியமில்லாத வீட்டு உழைப்பை வேலைவாய்ப்பாகக் காட்டி புள்ளிவிவரங்கள் புனையப்பட்டன.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை துளிகூட உயரவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது என்கிறது சிஎம்ஐஇ.
கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் பெருகியதாக ஒன்றிய அரசு காட்டும் புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை விவசாயத் துறையிலிருந்து எடுக்கப்பட்டவை. கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பெண்களும் ஆண்களுமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேறு வழியின்றித் தங்களின் குடும்ப விவசாய நிலங்களில் வேலை செய்கிறார்கள். உற்பத்தித் திறனை அதிகரிக்காத, வருமானமே தராத இந்த உழைப்புதான் “வேலைவாய்ப்புப் பெருக்கம்” என்பதாக வெட்கமின்றிக் காட்டப்படுகிறது.
தீர்வு இருக்கிறதா?
பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட வல்லுநர்கள் விமர்சனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சாத்தியமான மாற்றுகளையும் முன்வைக்கிறார்கள். முதலாவதாக, மக்கள் தலையில் சுமையேற்றாமல் கார்ப்பரேட் சமஸ்தானங்கள் உள்ளிட்ட பணக்காரர்களின் சொத்துகளுக்கும் வருமானத்திற்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டும். அவ்வாறு குறைந்த சதவீதத்தில் விதிக்கப்படும் வரியிலேயே அரசுக்குப் பெருந்தொகை கிடைக்கும்.
அந்த நிதியைக் கொண்டு, மறக்கடிக்கப்பட்டுவிட்ட சமூக முதலீடுகளை மீட்க வேண்டும். எடுத்துக்காட்டாக கல்வி, ஆராய்ச்சி, பொது சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, மலிவு விலை வீட்டு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மறுசுழற்சி எரியாற்றல், நீர்நிலைகள் மேலாண்மை, காடுகள் வளர்ப்பு, பசுமைப் பரப்பு விரிவாக்கம், விவசாயத்துடன் இணைந்த மதிப்புக் கூட்டு மையங்கள், விரிவான கொள்முதல், கூடுதலான சேமிப்பு மையங்கள் என திட்டமிட்ட முறையில் முதலீடுகள் நடைபெற வேண்டும்.
இந்த சமூக முதலீடுகள் உடனடியாக மட்டுமல்லாமல், நிலையானதாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கல்வி, ஆராய்ச்சிகளில் அரசின் முதலீடுகள் அதிகரிக்கிறபோது பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்குமான ஆசிரியர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உதவியாளர்கள் என்று நாடு முழுவதும் புதிய நியமனங்களுக்கு வழி திறக்கப்படும். இதே போன்று ஒவ்வொரு துறையிலும் சமூக முதலீடுகள் நல்ல விளைச்சலைத் தரும்.
கார்ப்பரேட்டுகளுக்கு வழியமைப்பதால் நிறையத் தொழில் நிறுவனங்கள் முளைக்கும், அவற்றில் வேலைகளும் ஏராளமாகத் தழைக்கும் என்று கதைக்கப்படுகிறது. அது விடியாக் கனவுகளில் தள்ளும் உத்திதான். கடந்த காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளோடும் பல தொழிலுறவு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது உண்மையே. பல நிறுவனங்கள் தலைதூக்கியதும் உண்மையே. ஆனால், வரைபடத்தில் அதற்கு ஈடான விகிதத்தில் வேலைக் கோடு உயரவில்லையே, ஏன்?
ஏனென்றால், இந்த ஒப்பந்தங்களையும் அவற்றில் உறுதியளிக்கப்படும் சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்கிற உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் நுழைகிறபோதே செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுவருகின்றன. வடிகட்டப்பட்ட சிலரையன்றி எத்தனை பேருக்கு இதனால் வேலை கிடைத்துவிடும்? ஆகவேதான் உறுதியான வேலைத்தளத்தைக் கட்டமைப்பதற்கு சமூக முதலீடுகள் தேவைப்படுகின்றன.
ஏற்கெனவே இருந்துவந்த அப்படிப்பட்ட ஒரு நிச்சய வேலைத்தளமாகிய “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்” கிராம மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்வதைத் தடுத்தது. அது உள்ளிட்ட பலன்களை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. மறுக்க முடியாது என்பதால் அதை அப்படியே கைகழுவிவிட்டு “விபி–ஜி ராம் ஜி” சட்டம் கொண்டுவரப்பட்டது. அது விலக்கிக்கொள்ளப்பட்டு முந்தைய சட்டம் மேலும் விரிவாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அதே போல் தேசிய நகர்ப்புற வேலை உறுதிச் சட்டமும் கொண்டுவரப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதால் உண்மையாகவே வேலைவாய்ப்புகள் விரிவாகும். இதை வெறும் கற்பனையிலிருந்து சொல்லவில்லை. சோசலிச நாடுகளில் இது இயல்பாகவே நடக்கிறது, அதில் வியப்பில்லை. ஆனால், ஜெர்மனி, ஜப்பான், டென்மார்க், நார்வே ஸ்வீடன், சிங்கப்பூர் உள்ளிட்ட சில முதலாளியப் பொருளாதார நாடுகளிலேயே இப்படிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சந்தை நெருக்கடியால் வேலைநீக்கம் செய்யும் நிலைமைகள் ஏற்படும்போது, தொழிலாளர்களுக்கு 90 சதவீத ஊதியத்தை அரசாங்கமே வழங்குதல், புதிய வேலைவாய்ப்புகள் இருக்கிற களங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தல், அதற்கான இணைப்புகளை ஏற்படுத்தித் தருதல், வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் புதிய திறன்களைக் கற்பித்தல், இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால கட்டாய உதவித்தொகை ஆகியவை அந்தத் திட்டங்களில் அடங்கும். இத்தகைய திட்டங்களின் பின்னணியில் அந்நாடுகளின் உழைப்பாளி மக்கள் நடத்திய நெடிய போராட்ட வரலாறுகள் இருக்கின்றன.
இங்கேயும் இது சாத்தியமா? ஆம், சாத்தியமே. அதற்குத் தேவைப்படுவன இரண்டு அடிவாரங்கள். ஒன்று ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கை மாற்றம். இரண்டு, அந்த மாற்றத்தை ஏற்படுத்தவல்ல மக்கள் போராட்டம்.
