கர்நாடகாவுடனான பிரச்சனைகளுக்கு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் முதிர்ச்சியான அணுகுமுறையைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கர்நாடகா பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா (முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு விஜயேந்திரா எழுதியுள்ள கடிதம்: ஆலயங்களின் பூமியும், அளப்பரிய செழுமையான கலாசாரத்தையும் கொண்ட தமிழ்நாடு, கர்நாடகத்துடன் பல நூற்றாண்டுகளாக ஆழமான பிணைப்பை கொண்டிருக்கிறது.
கர்நாடகமும் தமிழ்நாடும் பரஸ்பர மரியாதையையும் நல்லிணக்கத்தையும் நமது உறவின் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
கோடிக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவை, குறிப்பாக பெங்களூரை தங்கள் தாய்வீடாக எண்ணி அதன் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அதே அளவுக்கு, தமிழ்நாட்டில் கன்னடியர்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் பங்களித்துள்ளனர்.

அண்டை மாநிலங்கள் என்கிற போது நமக்குள் கருத்து வேறுமைகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால், அவற்றை நாம் எவ்வாறு தீர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பெங்களூரில் உள்ள திருவள்ளுவர் சிலை தொடர்பான நீண்டகாலப் பிரச்சனையை கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் ராஜதந்திரத்துடனும் பெருந்தன்மையாகவும் தீர்த்து வைத்தனர்.
நமது மக்களின் பரந்த நலன்கள் முன்னிற்கும் போது, கடினமான பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியும் என்பதை அவர்களின் முதிர்ச்சி நிரூபித்தது.
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்து காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க நீங்கள் விரைவில் பெங்களூருவுக்கு வருகை தர உள்ளதாக அறிகிறேன். கர்நாடக விவசாயிகள் மற்றும் மக்களின் மீது பரிவுடனும் முந்தைய தலைவர்களின் ராஜதந்திர மனப்பான்மையுடனும், கனிவுடனும் இந்தப் பேச்சுவார்த்தைகளை அணுகுமாறு உங்களைக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் மற்றும் காவிரி படுகை முழுவதும் உள்ள பல நகரங்களில் கோடிக்கணக்கான மக்களுக்குக் காவிரி ஒரு ஜீவநதியாகும். கர்நாடகாவில் வசிக்கும் கன்னடியர்கள் மற்றும் தமிழர்கள் இருவரும் குடிநீருக்காக அதையே சார்ந்துள்ளனர். சீரற்ற பருவமழை விவசாயிகளுக்கும் குடிமக்களுக்கும் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், அவர்களின் கவலைகளைப் புறக்கணிக்க முடியாது. ஆகையால் மேகதாது அணை திட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும். காவிரி நம்மை பிரிக்காமல் இருக்கட்டும்! இவ்வாறு விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
