‘கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்’ என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர். ஆனால் இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் போதிய நீர் இல்லை என்று கூறி, கர்நாடகா நீரைத் திறக்க மறுப்பு தெரிவித்து வந்தது. இதற்கிடையில் தமிழக முதல்வர் விஜய் காவிரிப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குத் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கர்நாடகாவிலும் கன்னட அமைப்புகள் விஜய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து கர்நாடகாவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று கூட்டியுள்ளார்.
இதற்கிடையில் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலை உருவானதால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கன அடி நீரைத் திறந்துவிடத் தொடங்கிய கர்நாடக அரசு, படிப்படியாக நீரின் அளவை உயர்த்தித் தற்போது 25,000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தளப் பதிவில்:
“கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, ‘கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்’ என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.
இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!”
எனத் தெரிவித்துள்ளார்.
