கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து கட்டியதால் குடகு மாவட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் (Cauvery Floods) கரை புரண்டோடுகிறது.
காவிரியின் பிறப்பிடமாக தலைக்காவேரி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ளது. குடகு மாவட்டத்தின் சிற்றோடைகளும் சிறிய ஆறுகளும் ஹாரங்கி போன்ற நதிகளும் இணைந்து காவிரியாக பெருவெள்ளத்துடன் பாய்ந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு பாய்ந்தோடி வருகிறது காவிரி.
தற்போது குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடகு மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான அப்பே அருவியில் காவிரி ஆறு சீறிப் பாய்ந்தோடும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.
இதேபோல மைசூரு சுஞ்சுனகட்டே அருவியிலும் நீர்வீழ்ச்சிகளே தெரியாத அளவுக்கு காவிரி, கிருஷ்ணராஜ சாகர் அணை நோக்கி வெள்ளமென பேரிரைச்சலுடன் சீறிப் பாய்கிறது. இந்த சுஞ்சுனகட்டே நீர்வீழ்ச்சி பிரமிக்க வைக்கக் கூடியதாக இருக்கும். இந்த அருவியில் காவிரி 60 அடி உயரத்தில் இரு பிரிவுகளாக கொட்டி பின்னர் ஒன்றாக இணைந்து கிருஷ்ணராஜ சாகர் அணை நோக்கி செல்லும் காட்சி பேரழகாக இருக்கும்.
இந்த இரு அருவிகளும் வெள்ளக் காடாக மிதக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
