தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தமக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உசிலம்பட்டி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.விஜய் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், “நான் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி, தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள், தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மக்களைச் சந்தித்து வருகிறேன்.
இந்நிலையில், பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதுடன், ஏற்கனவே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிவாங்கும் நோக்கில் சில சூழ்ச்சிகளும் நடந்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நான் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், எனக்கு தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
