காவிரி பிரச்சனை: விஜய் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது? – ரகுபதி விளாசல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

“கட்சித் தாவல் வல்லுநர்” நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று (ஆகஸ்ட் 2) கர்நாடகாவில் அம்மாநிலத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாததற்கான காரணம் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்:

“கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடக் கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில் அம்மாநில அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. ஆனால் இங்கு நாம் எந்த மாதிரியான நமது உரிமைகளை மீட்கப் போகிறோம்? நீதிமன்றம் வாயிலாகவா அல்லது சுமூக உறவு வாயிலாகவா என்ற கேள்வி உள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் மாறுபட்டு நிற்கின்றன.

ADVERTISEMENT

நமது சட்டசபையில் எல்லாக் கட்சிகளையும் அழைத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தானே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்? அடுத்த நாள் அதிமுக ஏன் மாற்றிப் பேசியது? எடப்பாடி பழனிசாமி அங்கேதானே இருந்தார், அங்கு தூங்கிக்கொண்டிருந்தாரா? நான்கு நாட்களுக்கு முன் அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அடுத்து இரண்டு நாட்களில் திமுக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறது. இதனால் தமிழக மக்களுக்குத்தானே பின்னடைவு? முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துத் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இவர்களை வைத்து நாம் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளப் பதிவில், “அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ள ‘கட்சித் தாவல் வல்லுநர்’ நிர்மல் குமார்!

ADVERTISEMENT

காவிரி தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது?

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வருகிறார்; டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கிறார். முன்னாள் முதலமைச்சர்கள், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் இன்று (ஆகஸ்ட் 2) நடத்தியிருக்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது. ‘கட்சித் தாவல் வல்லுநர்’ நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் கண்ட தலைவர் கலைஞர் அவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் அவர்களோ, நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் அவர்களோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறித்த நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, இங்குள்ள ஆளுநரும் நமது மாநில அரசைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும்.

மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் Complete Rest Mode-க்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நமது முதலமைச்சரையும் அரசையும் நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை; மழை பெய்து கர்நாடகம் தானாகத் தண்ணீர் திறந்துவிட்டால்தான் உண்டு எனும் அளவுக்கு அவநம்பிக்கையில் அவர்களைத் த.வெ.க. அரசு தள்ளுவது கடும் கண்டனத்துக்குரியது.

உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன. மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share