”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்; மேகதாது அணைதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு” என்று கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி பெங்களூருவில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டி.கே. சிவகுமார் கூறியதாவது: இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும் மாநில அரசுடன் இணைந்து செயல்படவும் வழிகாட்டவும் தயாராக உள்ளதாக கூறினர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மொத்தம் 177 டிஎம்சி நீரை தர வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு வர வேண்டாம் என தமிழக முதல்வர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்றுக் கொண்டு தமது பயணத்தை விஜய் கைவிட்டார்.
மேகதாது அணைதான் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பு அளித்துவிட்டது; மத்திய அரசும் தமது நிலைப்பாட்டை கூறிவிட்டது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு காலத்தை வீணடிக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி- மேகதாது அணை கட்டுமான பணிகளை தொடங்குவோம்.
மேகதாது அணையால் தமிழ்நாடு அதிக நீரைப் பெறப் போகிறதா? கர்நாடகா அதிக நீரைப் பெறப் போகிறதா? என்பது அல்ல பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.
