மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே எங்கள் மீது வழக்கு – செந்தில் பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக அரசு பயிர்கடன் தள்ளுபடி விவகாரம், மின் கட்டண உயர்வு, விவசாயிகள் போராட்டம், காவிரி விவகாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே எங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை முன்ஜாமீன் அடிப்படையில், கடந்த 25-ஆம் தேதி முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறுகையில், “தவெக எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான புகாரிலும், எஃப்.ஐ.ஆரிலும் எனது பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், இந்த வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டு, அதற்காக முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் காலையும் மாலையும் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறேன்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒரு வழக்குப் பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காகவும், மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிப்பதற்காகவும் கையெழுத்திடுவதில் இருந்து சில நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி காவல் நிலையத்திற்கும், விசாரணை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பியிருந்தேன். இதே கோரிக்கையை உயர் நீதிமன்றத்திலும் மனுவாகத் தாக்கல் செய்திருந்தோம்.

நேற்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பித்த நிலையில், இன்று வழக்கம்போல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்து வருகிறேன். விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் நிர்மல் குமார் கூறியது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஏற்கனவே சிறையைப் பார்த்தவன்; எதற்கும் பயந்து ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு தற்போது 50 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் உள்ளேன். 20 ஆண்டுகளைக் கடந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன்.” என்றார்.

ADVERTISEMENT

தவெக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் டி.கே. சிவகுமாரைத் தொடர்புபடுத்தி அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சட்டத்துறை அமைச்சரிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் வேறு ஏதோ ஒன்றை பேசுவார். மின்கட்டண உயர்வு விவகாரத்தில் எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு மிக எளிதாகக் கடந்து செல்கிறார். பின்னர் ‘நாங்களாகச் சென்று சரிபார்த்தோம்’ என்கிறார். மின்கட்டண உயர்வுப் பிரச்சினையில் உரிய பதிலளிக்க முடியாமல் அமைச்சர் நிர்மல் குமார் உண்மையை மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார்.

தவெக அரசு அமைந்து குறுகிய நாட்களிலேயே மின்கட்டண உயர்வு, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம், காவிரி விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளைத் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. இவற்றுக்குத் தீர்வு காண முடியாமல், மக்களிடம் உள்ள எதிர்ப்பைத் திசைதிருப்பவே எங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share