முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இப்போராட்டம் பரவிய நிலையில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் அமைப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தமிழகச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் தொடர்ச்சியாக 6 நாட்கள் இப்போராட்டம் நடைபெற்றது. மேலும் மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இவ்வாறு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டம் தொடங்கி 36 நாட்களுக்குப் பிறகு, கடந்த ஜூலை 25-ஆம் தேதி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்துப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. மேலும், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
