விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி ஜாமீன் வழங்கி உள்ளது.
கோவில்பட்டி பொதுக் கூட்டத்தில், ”சட்டசபை கதவுகளை மூடினால் முதல்வர் விஜய் எலும்புகளை உடைப்போம்” என பேசியதற்காக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜூலை 20-ந் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஜூலை 22-ந் தேதி டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி விசாரித்த நீதிபதி இளந்திரையன், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.
- எதிர்காலத்தில் முதலமைச்சருக்கு எதிராக இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசமாட்டேன் என்று மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும்
- தூத்துக்குடி காவல் நிலையத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் 2 முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
