தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவதூறாகவும்,மிரட்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி மார்க்கண்டேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது,உயர்நீதி மன்றத்தில் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சில விளக்கங்களை கேட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நேற்று (ஜூலை 30) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ பங்கேற்க வேண்டியிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
ஆனால் அரசுத் தரப்பில், “இவ்வழக்கு தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
