“எம்ஜிஆர்.. ஜெயலலிதா செய்யாததா?” விஜய் கர்நாடக பயணம் குறித்து மாணிக்கம் தாகூர் ஓபன் டாக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டுமே நமது மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து விடுவோம் என்று அர்த்தமல்ல என மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை உடனே திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார், காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட முடியாது. ஆகஸ்ட் 3-ந் தேதி தமிழக முதல்வர் விஜய், பெங்களூரு வருகிறார். முன்னதாக ஆகஸ்ட் 2-ந் தேதி கர்நாடகா அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழகத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நேற்று தமிழக முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டரை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சனை பூதாகரமாகி உள்ள சூழலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட்1) தமிழகம் வர உள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை சந்திப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமிற்காக ராகுல் காந்தி தமிழகம் வருகை தருகிறார். எனவே, எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி வருகையை கட்சியின் நிகழ்ச்சியாகவே பார்க்கிறோம்.

ADVERTISEMENT

அதேபோல், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்த கேள்விக்கு இரு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் முதலமைச்சர்கள் சந்திப்பது என்பது புதிதல்ல; எம்.ஜி.ஆர் காலத்திலேயே நடந்தது. ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயலலிதா மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டுமே நமது மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து விடுவோம் என்று அர்த்தமல்ல. முதலமைச்சரைப் பொறுத்தவரை ஒரு நல்லெண்ண முயற்சியையே மேற்கொள்கிறார். நாம் ஒன்றும் இந்தியா – பாகிஸ்தான் கிடையாது. ‘கர்நாடகாவிடம் கேட்டுப் பார்ப்போம்’ என்று நினைக்கிறார். நல்லெண்ண அடிப்படையில்தான் அவர் அங்கு செல்கிறார்.

ADVERTISEMENT

எல்லாவற்றிலும் ‘நான் சொல்வதைத்தான் முதலமைச்சர் செய்ய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது தவறு. சட்ட ரீதியாக நம் பக்கம் முழு நியாயம் இருக்கிறது; எனவே நீதி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share